பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பதினெண் புராணங்கள் தன்னை நான்கு பாகங்களாகப் பிரித்து, ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனனாகப் பிறந்தார். ஒரு சமயம், விசுவாமித்திரர் தசரதனிடம் இருந்து ராட்சசர்களைக் கொல்ல இராமனுடைய உதவி வேண்டும் என்று கேட்டார். இராமன் ராட்சசர்களைப் போரில் வென்றதால், தெய்வீக அஸ்திரங்களை உபயோகிப்பது பற்றிச் சொல்லிக் கொடுத்தார். மிதிலை மன்னனாகிய ஜனகரிடமிருந்த சிவனுடைய வில்லை உடைத்து, ஜனகன் மகள் சீதையை மணந்தான் இராமன். தன்னுடைய மூத்த மகனாகிய இராமனுக்குப் பட்டம் கட்டவேண்டும் என ஏற்பாடுகள் செய்து வந்தான் தசரதன். அவனுடைய மனைவியாகிய கைகேயி தன் வேலைக்காரியாகிய மந்தரை என்ற கூனியின் பேச்சைக் கேட்டு இராமனுக்குப் பட்டம் கட்ட விடாமல் செய்தாள். இராமன் சிறிய பையனாக இருக்கும் பொழுது மந்தரையைக் காலை வாரி விட்டுத் தள்ளிக் கீழே விழச் செய்தான். அதிலிருந்து இராமன் மேல் வெறுப்புக் கொண்ட மந்தரை இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தசரதனிடம் அவள் பெற்றுள்ள முதல் வரத்தால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு அனுப்பவும், இரண்டாவது வரத்தால் பரதனுக்குப் பட்டம் சூட்டவும் ஏற்பாடு செய்தாள். முன்னொரு காலத்தில் சம்பராசுரனுடன் போர் தொடுத்த தேவர்கள், தசரதனைத் தங்கட்குத் துணையாக வருமாறு அழைத்தனர். அப்போரில் காயம்பட்ட தசரதனுக்குக் கைகேயி சிறப்பாகப் பணிவிடை புரிந்தாள். மகிழ்ந்த தசரதன், அவள் எப்பொழுது வேண்டுமானாலும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி இருந்தான். இப்பொழுது தசரதனைக் கண்ட கைகேயி இந்த இரண்டு வரங்களையும் கேட்டுப் பெற்றாள்.