பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 பதினெண் புராணங்கள் பிருத்வி என்ற பெயர்க் காரணம் பிரம்மாவால் பங்கிட்டுத் தரப்பட்ட பூமிக்கு அரசனான பிருத்து நன்முறையில் ஆட்சி செய்ததால், பூமியில் வளங்கள் செழித்தன. பசுக்கள் பாலைப் பொழிந்தன. மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள் பெரிய யாகத்தைச் செய்தனர். யாகத்தின் முடிவில் சுதாக்கள் என்றும், மகதாக்கள் என்றும் இரு கூட்டங்கள் தோன்றின. பிருத்துவின் புகழைப் பாடுமாறு முனிவர்கள் இவர்களை ஏவினர். ஆனால் “பிருத்து மிகவும் இளையவன். இப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறான். இன்னும் எந்த வேலையும் செய்து காட்டவில்லை. அப்படி இருக்க அவனது எந்த வீரச்செயலை எவ்வாறு புகழ்வது?” என்று சுதர்களும் மகதர்களும் முனிவர்களைக் கேட்டனர். முனிவர்கள் எதிர்காலத்தை அறியும் ஆற்றலை இவர்களுக்கு வழங்கினர். உடனே பிருத்துவின் புகழை அவர்கள் பாடினர். இந்தப் புகழ்ப் பாடல்கள் எட்டுத் திக்கும் சென்று பரவின. இப்படி இருக்கையில், பூமியின் வேறொரு மூலையில் இருந்து ஒருசிலர் பிருத்துவைக் காண வந்தனர். அவர்கள் பிருத்துவை நோக்கி, “அரசே! உன் புகழ் எட்டுதிக்கும் பரவி எதிரொலிக் கின்றது. எங்களது கஷ்டத்தை நீ போக்க வேண்டும். பூமியில் ஒன்றும் விளைவதில்லை. வளமின்மையால் பசுக்கள் பால் தரவில்லை. என்ன செய்வது?” என்று வினவினர். இதைக் கேட்ட பிருத்து மிகக் கோபம் கொண்டு தன்னுடைய வில்லை எடுத்துக்கொண்டு பூமியைப் பிளப்பதற்குப் புறப்பட்டான். அஞ்சிய பூமி, பசு வடிவெடுத்துக் கொண்டு ஒடத் துவங்கி மேலுலகம், கீழுலகம் சென்று எங்கும் புகல் கிடைக்காமையால் பிருத்துவின் எதிரே சென்று வேண்டி நின்றது. பூமியாகிய பசு பிருத்துவை நோக்கி, “அரசே! பெண்ணாகிய என்னைக் கொல்வதால் உனக்கு ஒரு பயனும் விளையாது. பெண் கொலை என்ற பாவம்தான் மிஞ்சும். அதற்கு பதிலாக இந்த