பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பதினெண் புராணங்கள் ஏற்கெனவே இருந்த பூமி அளவால் சிறியதாக இருந்திருக் கலாம். மது கைடபர்களின் சதையை நீர்ப்பகுதியில் போட்டு அதை உயர்த்தி பூமியோடு சேர்த்திருக்கலாம். அப்படியானால் இவர்கள் வதத்திற்குப் பிறகு பூமியின் அளவு பெரிதாக ஆகியிருக்கலாம். மது கைடபர்கள் சதையில் இருந்து பூமியின் ஒரு பகுதி வந்ததால் அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மேதா என்றால் சதை என்று பொருள்) இதன் பிறகு பிரம்ம வைவர்த்த புராணம் பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு வகை உற்பத்தியை அடுத்தடுத்து கூறிக் கொண்டு செல்லுகிறது. இதன்படி முதல்வகை உற்பத்தி வரலாறு இங்கு தரப் பெறுகிறது. தொடக்கத்தில் எங்கும் நீரே நிறைந்திருக்க, கிருஷ்ணன் மிகப் பெரிய வடிவத்துடன் தண்ணிரில் பல்லாயிரம் வருடங்கள் மிதந்து கொண்டே இருந்தார். எங்கும் இருந்த தூசியும் புழுதியும் கிருஷ்ணன் உடலில் படிந்து படிந்து இறுகிப் போய் அதுவே பூமியாக மாறியது. இரண்டாவது வகை உற்பத்தி வரலாறு வருமாறு: பிரளய காலத்தில் பூமி நீருக்குள் மூழ்கி விடுகிறது. இத்தகைய பிரளயம் பிரம்மாவினுடைய ஒரு நாளின் இறுதிப் பகுதி ஆகும். பிரம்மாவின் மறுநாள் விடியும் பொழுது, மறுபடியும் உற்பத்தி தொடங்குகிறது. அப்போது தண்ணிருக்குள் மூழ்கிப் போன பூமியை மேலே கொண்டு வருமாறு விஷ்ணுவை வேண்டிக் கொள்கிறார் பிரம்மன். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து நீருக்குள் சென்று பூமியைத் தன் கொம்புகளுக்கிடையே வைத்து மேலே தூக்கிக் கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து வரும் கங்கையின் கதை மற்றப் புராணங்களில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது,