பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(11. இலிங்க புராணம்) இப்புராணம் பற்றி. இலிங்கம் என்பது ஒரு குறியீடாகும். பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஒரு விதையாகும். பரப்பிரம்மம், அலிங்கம் என்று சொல்லப்படும் நாமம், ரூபம் கடந்த பொருளாகும். நிர்குணமானதாகும். முக்குணங்களின் வடிவமாகிய பிரகிருதியுடன், நிர்குணப் பிரம்மம் தொடர்பு கொள்ளும் பொழுது, வடிவமற்றதாகிய இப்பிரகிருதி வடிவுடைய இப்பிரபஞ்சமாகத் தோற்றுவிக்கப்படுகிறது. இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலமாகிய பிரகிருதி மகாதேவனுடன் தொடர்பு கொண்டு தோற்றுவிக்கப்படுகிறது. “பரப்பிரம்மம் நிர்குனமானதாய், லிங்க வடிவையும் தாண்டி இருப்பினும், அந்தப் பரப்பிரம்மமே லிங்கம், பிரகிருதி ஆகிய அனைத்திற்கும் மூலமாய் அமைந் துள்ளது. அலிங்கம் என்பது சிவனையே குறிக்கும். அந்த அலிங்கமே சிவனோடு தொடர்புடைய லிங்கமாகி அந்த லிங்கத்தோடு தொடர்புடையது சைவம் எனப்படும்.” (லிங்கபுராணம் 1-3-) “லிங்கம் என்ற சொல்லுக்கு தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு, தனித்து பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கி இருப்பது என்பது பொருளாகும்.