பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்க புராணம் 473 வேறு வழியில்லாமல் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகில் உள்ள சராசரங்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதைக் காட்டினார். இதனைக் கண்டு பயப்படாத ததீசி, "விஷ்ணுவே! இந்த மாயையைக் கண்டு பயப்படுகிற முட்டாள் என்று என்னை நினைத்தாயா? இப்பொழுது நீ என்னைப் பார். உன்னுள் அடங்கி இருக்கிற அனைத்தும் என்னுள்ளும் இருப்பதைக் காண்பாய். ஆகவே இந்த முட்டாள்தனமான விளையாட்டுக்களை எல்லாம் விட்டு விட்டு தைரியம் இருந்தால் என்னுடன் போர்புரிய வா” என்று அழைத்தான். நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கண்ட பிரம்மா, தான் தலையிட்டு “விஷ்ணுவே, சிவபக்தனாகிய இவனை உம்மால் வெல்ல முடியாது. இருவரும் சமாதானமாகப் போய் விடுங்கள்” என்று கூறி அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்த, பின்னர் சத்திரியனாகிய கபா சிவபக்தனாகிய ததீசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நந்தியின் கதை : இக்கதை முன்னமே சிவபுராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நந்தி தோற்றம் பற்றிச் சிறு மாறுபாடு உள்ளது. சிவபுராணத்தில், நந்தி, கலப்பையின் கொழு முனையில் குழந்தையாக வந்தது என்றும், லிங்க புராணத்தில் விலதா வளர்த்த யாக குண்ட அக்னியில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது./ லிங்க புராணத்தில் இதனை அடுத்து யுகங்கள் பற்றி விரிவாகவும், பதினான்கு லோகங்கள், ஏழு துவீபங்கள் பற்றியும், சூரியன் பன்னிரண்டு மாதங்களில் வெவ்வேறு பெயருடன் சஞ்சரிப்பதையும் விரிவாகப் பேசுகின்றது. இவை பற்றி முன்னருள்ள பல புராணங்களில் கூறியுள்ளமையால் இங்கே இவற்றை விவரிக்கவில்லை,