பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 555 வாழ்ந்தான் என்றாலும், ஒருமுறை பூக்கள், கோயிலில் புகை போகும் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்து சென்ற பொழுது கால் இடறிக் கீழே விழுந்தான். ஆனால் உடனே இறந்துவிடவில்லை. சில நேரம் கழித்துத்தான் அவனுயிர் பிரிந்தது. அப்படிப் பிரிவதற்கு முன்னர் அவன் அந்தப் பூக்களையும், வாசனைத் திரவியங் களையும் கொண்டு மனத்தினால் சிவபூஜை செய்தான். சிவபூஜையில் ஈடுபட்டபடியே உயிர் துறந்தான். ஆதலின் மூன்று மணிநேரத்திற்கு இந்திரப் பதவியில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது முடிந்ததும் அவன் நரகத்திற்குப் போக வேண்டும் என்று எண்ணிய நாரதர் மெள்ள அவனிடம் வந்து, இந்திராணியைக் கூப்பிட்டு உன் பக்கத்தில் வைத்துக் கொள் என்று புத்திமதி கூறினார். ஆனால் கிட்டவா பிறர் மனைவியை விரும்பாதவன். அன்றியும் எல்லையற்ற கொடைத் தன்மை உடையவன் ஆதலால் இந்திரப் பதவிக்குரிய ஐராவதம் என்ற யானை, உச்சைச்சிரவம் என்ற குதிரை, சுரபி என்ற காமதேனு ஆகிய மூன்றையும் முறையே அகஸ்தியர், விஸ்வா மித்திரர் வசிட்டர் ஆகிய மூவருக்கும் தானமாகக் கொடுத்து விட்டான். அவன் இந்திரப் பதவியை விட்டுப் போனவுடன், பழைய இந்திரன் பதவிக்கு வந்தான். தான் மிகவும் விரும்பி வைத்திருந்த யானை, குதிரை, பசு இந்த மூன்றும் கொடுக்கப் பட்டு விட்டதை அறிந்த இந்திரன் அந்த முனிவர்களை அழைத்து அவற்றைத் திருப்பித் தருமாறு கேட்டான். எந்தப் பொருளிலும் பற்றில்லாத அவர்கள் சற்றும் தயக்கமின்றித் திருப்பித் தந்து விட்டனர். வள்ளன்மைக் குணம் உடைய இந்த கிட்டவாதான் மறுபிறப்பில் பலியாகப் பிறந்தவன். எனவே இந்தப் பிறப்பிலும் வள்ளன்மை உடையவனாகவே இருந்தான். தொண்ணுாற்றொன்பது யாகம் செய்த பலி, சுக்ராச் சாரியாரின் ஏவலில் நூறாவது யாகத்தைத் தொடங்கினான்.