பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 பதினெண் புராணங்கள் கொண்டு நீயும் ஏறிக் கொள்வாயாக அனைவரும் ஏறியவுடன் நானே அங்கு வருவேன். என் முகத்தில் முளைத்துள்ள கொம்பில் படகைக் கட்டி விடுவாயாக இம்மாதிரி செய்வதால் உயிர் வர்க்கங்கள் பிழைத்துக் கொள்ளும். நீர் வடிந்த பின்பு உயிர் வர்க்கங்களை உரிய இடத்தில் சேர்ப்பித்து இந்தப் பூமியை நீ ஆள்வாயாக’ என்று கூறிவிட்டு மறைந்தார். நூறாண்டுகள் மழையே பெய்யாததால் மரம், செடி, கொடிகள் அனைத்தும் வெந்து கரியாயின. பல மக்கள் பஞ்சத்திற்கு பலியாயினர். சூரியன் பூமியை அக்னிக் குண்டமாக மாற்றி னான். இவ்வாறு நடைபெற்ற பின் நூறாண்டுகள் முடியவே சம்வர்தா, சண்டா முதலிய சப்த மேகங்களும் ஒன்றாகக் கூடி, விடாமல் நூறு ஆண்டுகள் மழையாகப் பொழிந்தன. அதன் பயனாக பூமி முழுவதும் நீரில் மறைந்தது. விஷ்ணு சொன்ன படியே படகும் வந்தது. மனு, உயிர் வர்க்கங்களை ஏற்றிக் கொண்டு அங்கு தோன்றிய மீன் கொம்பில் படகைக் கட்டி விட்டான். மீன் பல இடங்களுக்கும் படகை இழுத்துச் சென்றது. அப்படிச் செல்கின்ற காலத்தில் மனு மீனிடம் பல கேள்வி களைக் கேட்டான். மீன் சொன்ன பதிலே மச்ச புராணமாகும். பிரபஞ்சத் தோற்றம் ஆதியில் எங்கும் இருளே படர்ந்திருந்தது. ஒருநாள் அந்த இருளைக் கிழித்துக் கொண்டு பரப்பிரம்மம் வெளியே வந்தது. வெளியே வந்த அது தன்னைத் தானே மூன்று பங்காகப் பிரித்துக் கொண்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன் உண்டாயினர். முதலில் தோற்றுவிக்கப்பட்டது நீரே ஆகும். விஷ்ணு அதில் படுத்து உறங்கலானார். நீண்ட காலத்திற்குப் பிறகு நீரில் ஒரு பொன்முட்டை மிதக்கலாயிற்று. அது கோடி சூரியப் பிரகாசமாய் இருந்தது. அதன் உள்ளே ஒரு பகுதியில் பிரம்மன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டார். மறுபாதியில் இந்தப் பிரபஞ்சம் முழுதும் கருவடிவில் இருந்தது. ஒராயிரம்