பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/700

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


672 பதினெண் புராணங்கள் பிரம்மதத்தனிடம், காலையில் ஒரு பிராமணன் வந்து நின்றான். அந்த பிராமணன், “அரசே! எனக்கு முதுமைக் காலத்தில் எவ்விதக் குறையும் இன்றி வாழ நிலங்கள், மாடுகள், பொன் ஆகியவை வேண்டும். தருவீர்களா” என்று கூறிவிட்டு, வியப்போடு தன்னைப் பார்க்கும் பிரம்மதத்தனைப் பார்த்து மெதுவாக, “அரசே! பசுமாடு, வேடர்கள், மான், பறவைகள்” என்று மந்திரம் சொல்வது போல் சொல்லி முடித்தான். அரச வாழ்க்கையில், சுகபோகத்தில் மூழ்கி இருந்த மன்னன் பிரம்மதத்தன் மனத்திரையில் பழைய பிறப்புக்களும், அதன் காரணமும் வரிசையாக வந்தன. தன்னுடைய சகோதரர்கள் ஆன்மிக வளர்ச்சி அடைந்து காட்டிற்குச் சென்று விட்டதை அறிந்த மன்னன் எதிரே இருந்த அந்தணனுக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்து அனுப்பி விட்டான். தன் மகனை அழைத்து அவனுக்கு அரசைத் தந்தான். மந்திரி குமாரர்களை அழைத்து நடந்ததைக் கூறியவுடன் இவர்கள் மூவரும் பறவைகளாக இருந்தவர்கள் ஆதலால் பழம்பிறப்பு நினைவுக்கு வர உடனே இந்தச் சுகபோகங்களைத் துச்சமாகக் கருதி உதறிவிட்டு மூவருமாகக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்று விட்டனர். முனிவர்கள், 'லோமஹர்ஷனரே! கதையை நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம். ஆனால் ஒரு சந்தேகம். எறும்புகள் பாஷையை எப்படி பிரம்மதத்தன் அறிந்து கொண்டான்?” என்று கேட்க, லோமஹர்ஷனர் "அது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியமில்லை. பிரம்மதத்தன் தந்தை, தனக்கு மகன் வேண்டும் என்று வேண்டும் பொழுதே ஜீவராசிகளின் பாஷையை அறியும் சக்தியுடையவனாக அவன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதனால்தான் பிரம்மதத்தனால் எறும்புகளின் பாஷையை அறிந்து கொள்ள முடிந்தது” என்று கூறினார்.