பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 பதினெண் புராணங்கள் ஒருமுறை இந்திர சபையில் ஒரு நாட்டியத்திற்கு ஏற்பாடாயிற்று. நாட்டிய சாத்திரத்தின் தந்தையாகிய பரத முனிவரே முன்னின்று நடததினார். மேனகை ரம்பை, ஊர்வசி ஆகிய மூவரும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். தன்னைக் காப்பாற்றியவனும், அழகில் மிகுந்தவனுமாகிய புரூரவன் எதிரிலே அமர்ந்திருந்தான். ஊர்வசி அவனையே அதிகம் கவனித்துத் தன் வசம் இழந்தாள். அதனால் ஜதிவிட்டுப் போய்விட்டது. கோபம் கொண்ட பரத முனிவர் பூமியில் ஐம்பத்தைந்து ஆண்டு வாழ்வாயாக என்று சாபமிட்டார். பூமிக்கு வந்த ஊர்வசி புரூரவனை மணந்து அயு, திரிதயு, முதலான எட்டுப் பிள்ளைகளைப் பெற்றாள். கச்சன் - தேவயானி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் போர் நடந்தது. இந்தச் சண்டையில் ஒரு வேறுபாடு இருந்து வந்தது. தேவர்களின் குருவாக பிரஹஸ்பதியும், அசுரர்களின் குருவாக சுக்கிராச்சாரியும் இருந்தனர். தேவகுருவான பிரகஸ்பதிக்குத் தெரியாத ஒரு மந்திரம் சுக்கிராச்சாரியாரிடம் இருந்தது. மிருத்யுசஞ்சீவினி என்ற மந்திரத்தால் இறந்தவர்களை எழுப்ப முடியும். பிருஹஸ்பதிக்கு இந்த மந்திரம் தெரியாது. தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் இறந்தால் இறந்தவர்கள் தாம். ஆனால் அசுரர்கள் பக்கத்தில் எத்தனைபேர் இறந்தாலும், அத்துணைப் பேரையும் மிருத்யுசஞ்சீவினி மந்திரத்தால் சுக்கிராச்சாரியார் மீட்டு வருவார். இதனால் ஒவ்வொரு போரிலும் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, அசுரர்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்தது. தேவர்கள் கூடி யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். பிரஹஸ்பதியின் மகனாகிய கச்சன் சுக்கிராச்சாரியாரிடம் சென்று எப்படியாவது அந்த மந்திரத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த யோசனையின் முடிவு.