பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/711

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மச்ச புராணம் 683 தாயின் எதிரே இந்திரனை நிறுத்தி அவனைக் கொல்வதற்குத் தயாரானான். அப்போது பிரம்மாவும் காசியப முனிவரும் அங்கே வந்தனர். பிரம்மா வஜ்ராங்கனைப் பார்த்து பின்வருமாறு பேசினார். "நீ இவனைக் கொல்ல வேண்டா. இந்திரன் இறந்தால் தீர்க்க முடியாத சில பிரச்சினைகள் உண்டாகும். மேலும் உன்னால் கட்டப்பட்டு உன் முன் நிற்பதே இந்திரனுக்குக் கிடைத்த பெரிய அவமானம். இந்திரப்பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி அவமானப்படுவது இறப்பதை விடக் கொடுமையானது. ஆகவே இவனை விட்டு விடு” என்று கூறினான் பிரம்மன். அதைக் கண்ட வஜ்ராங்கா, 'இவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. என் தாயின் ஆணைக்குக் கட்டுப்பட்டே இவனை இங்குக் கொண்டு வந்தேன். அனைத்துலகங்களையும் படைக்கும் தலைவரான தாங்களும் என் தந்தையும் கட்டளை இடும்போது எக் காரணத்தைக் கொண்டும் அந்தக் கட்டளையை மீறமாட்டேன். ஆகவே இவனை அவிழ்த்து விடுகிறேன்' என்று கூறி இந்திரனை விடுதலை செய்துவிட்டான். இது நடந்த பிறகு, பிரம்மா வஜ்ராங்கனைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்று சொல்ல, நெடுங்காலம் பெருந்தவத்தில் நான் ஈடுபட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான் வஜ்ராங்கன். அந்த வரத்தைக் கொடுத்த பிரம்மன், வாரங்கி என்ற அழகான பெண்ணை உண்டாக்கி வஜ்ராங்கனுக்கு மணம் செய்து வைத்தான். சிலகாலம் கழித்து வஜ்ராங்கன் கடுந்தவம் ஒன்றை மேற்கொண்டான். ஆயிரம் ஆண்டுகள் இவ்வாறு செய்த பிறகு அடுத்த ஆயிரம் ஆண்டுகள் தலைகீழாக நின்று தவம் செய்தான். அதனை அடுத்து நீரினுள் சென்று இதே போன்று தவத்தை மேற்கொண்டான்.