பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிற்றுப்பத்து தெளிவுரை

7

ஒன்பதாம்பத்து வரையுமுள்ள 80 செய்யுட்களே கிடைத்துள்ளன. ஆனால், தொல்காப்பிய உரையாசிரியரான ஆசிரியர் நச்சினார்க்கினியரின் காலத்தில் இந்நூல் முழுமை யாகவே கிடைத்திருக்கிறது. இதனை அவரது உரையுள் வரும் ‘பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலின் பாடாண் திணை ஆயிற்று’ என்னும் உரைக் குறிப்பால் அறியலாம்.

பதிற்றுப்பத்துச் சார்ந்த செய்யுட்களாகச் சில தொல்காப்பிய உரைகளுக்கு இடையிலும், புறத்திரட்டிலும் காணப் பெறுகின்றன. அவை இந்த இரண்டுமுதலாக ஒன்பதுவரை யுள்ள பத்துக்களிற் சேராதவை. அவை நூலிறுதியில் தனியாகத் தரப்பட்டுள்ளன. அவை முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சேர்ந்த செய்யுட்களாகவும் இருக்கலாம்.

வரலாற்றுச் செய்திகள் பல இந்நூலால் அறியப்படுகின்றன. அவை வாய்மையாதலைப் பிற சங்கநூற் செய்திகளும், வரலாற்ருளர்தம் கூற்றுக்களும் அரண் செய்கின்றன. ஆகவே, பழந்தமிழர் வரலாற்றை உணர்த்தும் வரலாற்று நூலாகவும் இதனைக் கொள்வது பொருத்தமாகும்.

இந் நூலுக்குப் பழைய உரைக்குறிப்புக்கள் அமைந்த தொகுப்பு ஒன்றும் இருந்தது. அதுவே, இதன் பொருள் வளத்தை அறியவும், அதனைச் சார்ந்தும் தழுவியும் பல உரை விளக்கங்கள் தோன்றவும் ஊற்றுக்களனாகிய சிறப்புடைத்து. அதனை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமும் அறியப்பட வில்லை; எனினும், அவர்தம் புலமைச் செவ்வியைமட்டும் அக் குறிப்புக்கள் நமக்கு நன்கு காட்டி உணர்த்துகின்றன.

இந் நூலின் பதிகங்களைப் பிற்காலத்துச் சான்றோருள் ஒருவரோ அன்றிப் பலரோ செய்திருக்கலாம் எனவும், அல்லது நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியரே செய்திருக்க லாம் எனவும் கருதுவர். அவர் யாவராயினும், அவை மிகவும் சிறப்புடையவை என்பது அவற்றைக் கற்பவர் எளிதிற் காணக் கூடியதாகும்.