பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பதிற்றுப்பத்து தெளிவுரை

(5) மெய்யாடு பறந்தலை, (6) வாள்மயங்கு கடுந்தார்,
(7) வலம்படு வென்றி, (8) பரிசிலர் வெறுக்கை,
(9) ஏவல் வியன்பணை, (10) நாடுகாண் அவிர்சுடர்

பாடிப்பெற்ற பரிசில் : நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத், தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

அளவற்ற புகழ்ச் செல்வத்தைக் கொண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுக்கு வேளாவிக் கோமான் பதுமனின் மகளான ‘பதுமன் தேவி’ பெற்றுத் தந்த மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். அவன்—

போர்முனையிடத்தே பகைத்து வந்தாரான வேற்றரசர் படைகள் எல்லாம், தன் தோற்றத்தாலேயே அஞ்சி நடு நடுங்குமாறு வீரப்பொலிவுடன் பிறந்தவன். தன் போராண்மையாலும், நாடுகாவல் திறனாலும் தன் குடியின் பலவான புகழையும் வளர்த்தவனாக விளங்கியவன். முறைமையினலே உண்டானதாகிய பூழிநாட்டைப் படையெடுத்துச் சென்று வென்று தன் நாட்டோடுஞ் சேர்த்துக் கொண்டவன். உருட்சியான பூக்களையுடைய கடம்பினைக் கொண்ட கடம்பின் பெருவாயில் என்னுமிடத்திலே இருந்தோனாகிய நன்னனை, அவனுடைய நிலையான போர் ஆற்றலையே முற்றவும் அறுத்து வெற்றி கொண்டவன். பொன்னைப்போல விளங்கும் பூக்களைக் கொண்ட அவனது காவன்மரமான வாகைமரத்தை வேரொடும் வெட்டியழித்தவன். போர்க் களங்களிலே பாய்ந்தோடிய குருதியாகிய சிவந்த வெள்ளம் யானைகளையும் இழுத்துச் செல்லுமாறு, பல பெரும் போர்களையும் செய்து பகைவரை அழித்து வெற்றி கொண்டவன். குருதியாற் சிவந்த அக் களங்களிலே கள வேள்விகளைச் செய்தும் புகழடைந்தவன். தளர்ந்த குடிகளைத் திருத்தி வாழச் செய்தவனும், வெற்றியே அடைபவனும் ஆகிய வெற்றியாளன் அவன். அத் தகையானாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனர் பத்துப் பாட்டுக்களால் போற்றிப் பாடினர்.