பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

பதிற்றுப்பத்து தெளிவுரை

இந் நூலின் திணை முற்றவும் பாடான் திணையே என்பது நச்சினார்க்கிளியர் கருத்தாயினும், பிற திணைகளையும், துறை களையும் சான்றோர் சிலர் வகுத்திருக்கின்றனர். அவற்றையும் அவற்றின் விளக்கங்களையும் நூலினுள்ளே காணலாம்.

தமிழரின் பொற்காலப் பெருமிதநிலையையும், தமிகத் தின் பழங்காலத்து வளமையின் வற்றாத ஏற்றத்தையும், தமிழ்ச் சமுதாயத்தின் சால்பு நிரம்பிய தனித்தன்மையோடு அமைந்த ஒழுகலாறுகளையும், தமிழ்நலம் பாரிக்கும். தன்னிகரற்ற ஆர்வப்பெருக்கையும் நாம் மனங்கொண்டு பூரிப்படையவும், இன்றைய நிலையோடு ஒப்பிட்டுக் கண்டு தெளிவும் புத்துணர்வும் செம்மாப்பும் புத்தூக்கமும் பெறவும், இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் உதவக் கூடியன.

வடபுல அரசர்களின் வலிமையை அழித்து வென்றி கொண்டு, வடவிமயத்தும் தமிழ்க் கொடியைப் பறக்கவிட்ட தமிழரின் மறமாண்பை நினைத்துப் பெருமிதங்கொள்வதோடு, அந்த மறமாண்பு சிதைவுற்று மழுங்கியதற்கான காரண காரியங்களையும் ஆய்ந்து தெளிந்து, நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்வதற்கும் இச்செய்யுட்கள் சிறந்த தூண்டுதல் களாக விளங்குவன.

உலக வரலாற்றிலே மாபெரும் வெற்றியாளர்களாக மதிக்கப்பெறும் கிரேக்கத்து அலெக்சாந்தருக்கும், மற்றும் பிறருக்கும் மேலான வெற்றியாளராகத் திகழ்ந்தவர்கள் சேரமன்னர்களான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர்!. இதனைச் சான்றுகாட்டி உலகின்முன் உறுதிப்படுத்தத் தமிழ் அறிவாளர்கள் முன்வர வேண்டும்.

இன்னொரு வரலாற்று உண்மையையும் நாம் பதிற்றுப் பத்தால் அறிகின்றோம். அஃது, இந்நாளிற் கேரளத்தாராகவும், மலையாள மொழியினராகவும் தனித்தன்மை பெற்று விளங்குவோர் அனைவரும், பண்டைத் தமிழகத்துத் தமிழ்ப் பெருங்குடிகளுள் ஒருவரான சேரர் வழிவந்த பழந்தமிழ்ப் பரம்பரையினரே என்பதாகும்.