பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிற்றுப்பத்து தெளிவுரை

9


காலப்போக்கிலேயும் வேற்றார் ஊடுருவலாலேயும் நிகழ்ந்துவிட்ட மொழி மாற்றத்தால் இவர்கள் தனிமொழியினராக வாழ்ந்தபோதும், பழந்தமிழ்ப் பெருங்குடியினரின் வழித்தோன்றல்களே தாமும் என்று அவர்களும் பெருமிதங் கொள்வதை நாம் வரவேற்கவேண்டும். அதற்கேற்ற தமிழ்ப் பணியையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஊக்கத் தையும் உதவிகளையும் செய்யவேண்டும். இதற்கும் இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் நம்மைத் தூண்டுவனவாகும்.

இறுதியாக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' எனவும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர் எனவும் எழுந்த உலகஒருமை முழக்கங்களின் நினைவோடு, இப் பழந்தமிழ் நூலின் பெருமையைப் பார்முழுதும் கற்றுப்போற்றவும் வகை செய்யவேண்டும் என்னும் விருப்பத்தோடு, இதனைத் தமிழ் அன்பர்களின், தமிழார்வமிக்கவும் வரலாற்றார்வமிக்கவுமான உள்ளங்களுக்கு நல்விருந்தாக அளிக்கின்றேன்.

இச் செய்யுட்களைப் பாடியோர் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்புக்களும், இச் செய்யுட்களாற் பாடப்பெற்றோரைப் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்புக்களும் இந் நூலின் இறுதி யில் தரப்பட்டுள்ளன. அவை கற்பவருக்கு உதவுமென்பது தெளிவு.

இத்துணை நலம்பல செறிந்த இத் தமிழ்த் தொகை நூலைத் தேடி எடுத்துச் செப்பமாக முதற்கண் அச்சேற்றி வழங்கிய பெருமை, தமிழ்த் தாத்தா' எனப் பெரும் புகழோடு நிலவும் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களையே சாரும். இதன் பின்னர்ப் பேருரையாசிரியர் திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்களின் அகலவுரைப் பதிப்பும், யாழ்ப்பாணத்துப் பண்டித திரு சு. அருளம்பலம் அவர்களின் ஆராய்ச்சியுரைப் பதிப்பும், திரு. மீ. பொன் இராமாாதன் செட்டியாரவர்களின் உரைப்பதிப்பும் வெளிவந்தன. இதன் மூலபாடத்தைத் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது சங்கநூல் தொகுதிகளில் செப்பனிட்டு வெளியிட்டார்.