பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயர்தமிழ் ஒளிநூல் !

பாநலம் கெழுமப் பண்டைப்
பைந்தமிழ்ப் பாவல் லோர்கள்
நாநலம் பொலியப் பாடி
நற்றமிழ் மரபீர் யாண்டும்
யாநலத் துள்ளும் மேலாம்
எழிற்றமிழ் நலம்காப் பீரென்
றோர்மனம் கொளவே சொன்ன
உயர்தமிழ் பதிற்றுப் பத்தாம்!
(1)


வந்திரந் தார்கட் கெல்லாம்
வான்பொழி முகில்போல் ஈத்தும்
தம்திறல் உலகோர் காணத்
தண்டுகொண் டிமயத் தெல்லை
வெந்திறல் விளைத்தும் நாட்டின்
விளைவொடு மானம் காத்தும்
வந்தநற் சேர வேந்தர்
வான்புகழ் அந்நூல் காட்டும்!
(2)


பதிற்றுப்பத் துரைக்கும் முன்னைப்
பண்புளம் சேர நெஞ்சிற்
கதித்தெழும் தமிழப் பற்றாற்
கதிரொளி காலும் வாழ்வில்
மதித்துநம் தமிழர் மாண்பே
மாநிலத் துயரும் வண்ணம்
கதித்தெழு செயல்கள் ஆற்றல்
கருத்தெழும் எழுந்தால் வாழ்வோம்!
(3)

— புலியூர்க் கேசிகன்