30
பதிற்றுப்பத்து தெளிவுரை
பெரிதும் உபசரிக்கப்பட்டு, எம் துயர் முற்றத் தீர்ந்தேமாய், நின் திருவோலக்கக் காட்சியைக் கண்டும் பெரிதும் இன்புற்றனம் என்பதாம். சிங்கவேறு வேட்டங்கருதிக் காட்டிலே வெளிப்படின், பிற விலங்கினம் மந்தைமந்தையாகச் சேர்ந்து இருப்பினும், அதற்கு அஞ்சி நடுநடுங்குமாறு போலச், சேரலாதன் படையொடு, புறப்படின், பகையரசர் பலராயினும் அவர் நெஞ்சம் நடுங்குவர் என அவன் மறமேம் பாட்டைக் கற்பித்துக் கூறினர். களிற்றது மதநீரிலே மொய்த்த ஞமிறுகளைக் காட்டு மல்லிகையைப் பிடுங்கி ஒட்டும் பிடியையுடைய குன்று என்றது, அவையும் பிறர்க்கு ஊறு செய்யாவாய் இன்புற்றிருக்கும் என்பதாம். கொலைவல் கொடியரான ஆறலை கள்வர் எவரும் இலர் எனச் சேரலாதனின் காவற்சிறப்பைக் கூறியதுமாம். அன்பாலே செறிவுற்ற அவன் தேவி அவ்வாறு காதற்பேரன்பினைக் கொண்டவள் என உள்ளுறுத்துக் கூறியதும் ஆம்.
தொல் பசியுழந்த பாண்சுற்றத்தினர் பெற்ற புது வளமை, நெடுஞ்சேரலாதனின் கொடைமனச் செவ்வியைச் காட்டுவதாகும்.
சிதைந்து மண்தின்னப் பெற்று விளங்கும் அழுக்காடைக்கு நனைந்த பருந்தின் சிறகை உவமித்தனர். ‘கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன பாறிய சிதாரேன்’ எனப் பிறசான்றோரும் இந்த உவமையைப் பயன்படுத்துவர் (புறம் 150 - வன்பரணர்).
‘இரும்பேர் ஒக்கல்’ என்பதற்கு வறுமையாலே மேனி நிறம் கருமைப்பட்டுப்போன பெரிய பாண் சுற்றம் எனவும் பொருள் கொள்ளலாம்.
இப் பாட்டு இப் புலவர் பெருமானும் பாணச் சுற்றத் தோடே கூடியவராகச் சென்றனர் என்பதனையும், இவரால் அவர்களும் உபசரிக்கப் பெற்றனர் என்பதனையும் காட்டும். ஊனுணவு அந்தணரும் அந்நாளிற் கொண்டது என்பதும் அறியப்படும்.
13. பூத்த நெய்தல்!
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கும். வஞ்சித்தூக்கும். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் சாவற் சிறப்பும்.