32
பதிற்றுப்பத்து தெளிவுரை
மழை வேண்டு புலத்து மாரநிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே!
தெளிவுரை : கோடைக் காலத்தே ஆடுகளைக் கூட்டிக் கிடைமறித்த நீரற்ற வறண்ட வயல்களுள் மழைக்காலத்தே நீர் மிகுதிப்பட்டு ஆரல்மீன்கள் கலித்துப் பல்கிப் பிறழத் தொடங்கும். ஆனேறுகள் தம்முட் பொருதலினாலே சேறுபட்ட வயல்கள். மீண்டும் உழுது பண்படுத்தாமலேயே விதைப்பதற்கான பக்குவத்தையும் அடைந்திருக்கும். கரும்புப் பாத்திகளிலே பூத்துள்ள நெய்தல் மலர்கள், பெருங்கண்களை உடையவான எருமைக் கூட்டத்தை, வேற்றிடம் நோக்கி உணவுகருதிப் போகாதபடி தடுப்பனபோல நிறைந்திருக்கும். ஆரவாரம் பொருந்த இளமகளிர் துணங்கையாடி மகிழ்ந்த வீட்டின் புறங்களிலே, வளைந்த தலையினவான கிழட்டுப் பசுக்கள், ஆடும் அம் மகளிரது தழையுடைகளினின்றும் சோர்ந்து வீழ்கின்ற ஆம்பல்மலர்களை உண்டபடியே தம் பசியாறிக்கொண்டிருக்கும்.
தழைத்து வளர்ந்துள்ள தென்னைகளையும், பல்வேறு பறவையினங்களும் தங்குதலினாலே ஒலியெழுந்தபடி இருக்கும் மருதமரங்களையும், வயல்களுக்கு நீர்பாய்ச்சு தற்பொருட்டாக அமைந்த வாய்க்கால் தலைப்புக்களையும், பூக்கள் மலிந்துள்ள பொய்கைகளையும் கொண்டனவாக, வளத்துடன் நின் பகைவரது ஊர்கள் பலவும் விளங்கும்.
பகையரசரது வளமான அத்தகைய ஊர்கள் பலவும் வளம் சிதைந்து போகுமாறு, நீதான் அச்சத்தைத் தோற்று வித்தாயாய், அவ் அரசரது ஊர்கள்மேற் படையெடுத்தனை! சிவப்புற்ற கண்களோடுஞ் சென்றனை! நீ தாக்கி அழித்த அப் பகையரசரது அரண்களைக் கொண்ட ஊர்கள் எல்லாம், தம்பழைய தன்மை கெட்டனவாய், அழிவையும் அடைந்தனவே!
கூற்றத்தால் தாக்குண்டு உயிரைப் பறிகொடுத்த பின்னர் எஞ்சிக்கிடக்கும் வெற்றுடலானது, கணத்துக்குக் கணம் தானாகவே சிதைந்துகொண்டே போகும். அதுபோல தத்தம் தலைவர்களை இழந்துவிட்ட பகைவர் நாட்டு அரண்களும் தமக்குத் தாமாகவே சிதைவுற்று அழியலாயினவே!
மலர்ந்த பூக்களோடும் கூடியவான கரும்பு வயல்கள் தம் பொலிவிழந்தனவாய்ப் பாழ்பட்டுப் போயினவே! அவ்