உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பதிற்றுப்பத்து தெளிவுரை

மகிழ்வுற்றாளாகப் போற்றிப் பாடுதலைச் செய்ய, அதனைக் கேட்டு உவக்கும் வேந்தனே எனினும் பொருந்தும். மிடைதல் - நெருங்கப் பதித்தல். வரைப்பு - உலகம். தவலல் - தாழ்தல். உலகொடு - உலகிடத்து; வேற்றுமை மயக்கம்.

விளக்கம் : ‘நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே’ எனப் பெரும் பூதங்களின் அளவற்ற தன்மையைப் பிறரும் கூறுவர் (குறுந்தொகை 3 - தேவகுலத்தார் பாட்டு). பொறுத்தலில் நிலத்தைப் போன்றும், அருளும் தன்மையில் நீரைப் போன்றும், வலிமையிற் காற்றைப் போன்றும், ஆராய்வில் வானைப் போன்றும் அளவிறந்த ஆற்றலுடையான் எனப் பொருத்திக் காண்க.

‘கடலக வரைப்பின் இப் பொழின் முழுதும் ஆண்ட நின்முன் திணை முதல்வர்’ என்றது, சேரலாதனுக்கு முற்பட்ட பலகாலத்தும், சேர மன்னருட் பலர் இந்த நாவலந் தீவினை முற்றவும் கைக்கொண்டு ஆண்டுவந்தனர் எனக் கூறியதாம். தவாஅலியர் - கெடாமல் என்றும் புகழோடே விளங்கு வாயாக! குடிச்சிறப்பைக் கூறி, அதனை மேலும் ஒளிபெறச் செய்த இவன் தனிச்சிறப்பையும் வியந்து பாராட்டினர்.

15. நிரைய வெள்ளம்!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு, வண்ணம்; ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நிரைய வெள்ளம். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் நாடுகாவற் சிறப்பும்.

[சேரலாதனின் படைப்பெருக்கத்தின் வலிமையைக் கூறுவார், பகையரசர்க்கு நிரைய பாலரைப்போலத் தோன்றி அழிவை விளைவிப்பவர் எனச் சிறப்பித்த நயம்பற்றி இப் பாட்டிற்கு இப் பெயரைத் தந்தனர்.]

யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மரம் முருக்கி
நிரைகளிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக் 5