உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பதிற்றுப்பத்து தெளிவுரை

என்றதும் மற்றும் வந்து பரிசில் வேட்டு நின்ற பிறதுறைக் கலைஞரை. வல்லாராயினும் - வன்மை அல்லாதாராயினும். 'வயிறு பசிகூர ஈயலன்' என்றது, என்றும் வயிறு பசிகூராத படி, பேரளவு செல்வத்தை நல்குவான் என்றற்காம். 'ஏனோர் பசிபோக்கும் அவனைப் பெற்ற தாயின் வயிறு என்றும் குற்றமிலது ஆகுக என்று வாழ்த்துகின்றனர். சான்றோனைப் பெற்ற தாயின் வயிற்றை வாழ்த்தல் பழைய மரபு. ஈன்ற வயிறே இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே' எனத் தாயர் கூறும் மரபு காண்க- (புறம் 84).

பிள்ளைகள் பலவற்றைப் பெறினும், அவற்றால் எல்லாம் சிறப்பு அடையாது, சான்றோன் ஒருவனைப் பெற்றபோதே சிறப்பு அடையும் தாய்வயிறு என்பது கருத்தாகும். 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்னும் குறளையும் நினைவு கொள்க. சான்றோன் - களத்தே வீழ்ந்த மறவன்; நாட்டு நலங்கருதித் தன்னுயிர் தருதலின் சான்றாண்மை உடைமை உணரப்படும்.

புலவர்கள் பாட்டுடைத் தலைவனையும், அவன் மனைவியையும் வாழ்த்தல் இயல்பு. ஆயின், இங்கே அவனைப் பெற்ற தாயின் வயிற்றையும் மனம் உவந்து வாழ்த்துகின்றனர்! அந்தத் தாயின் வயிறும் இத்தகைய சான்றாளனைப் பெற்றதனாலே புகழ்பெற்றது என்பது கருத்து.

வீரச் செறிவினேர் பலரது வரலாறுகளை நாம் நோக்கினால், அவரைப் பெற்ற தாயரது சிறப்பே அவரை அவ்வாறு உருவாக்கியது என்று அறியலாம். சின்னஞ்சிறு வயதிலே அவர் அவர்களது ஒழுக்கத்தை உருவாக்கும் திறனும், உள்ளத்தே பெய்கின்ற மறமாண்புமே நிலைபெற்று வளர்ந்து செழித்து அவர்களே உயர்த்துகின்றன.

இதுபற்றியே பதிற்றுப்பத்துப் பதிகங்கள் எல்லாம் தந்தையின் பெயரையும் தாயின் பெயரையும் குறிப்பிடு கின்றன. இது மிக நல்ல மரபு: பிற்காலத்தே நழுவவிட்ட மரபு.

பழந்தமிழ்ப் பெண்களின் மறமாண்புச் செய்திகளைப் புறப்பாடல்கள் பலவும் உணர்த்தும்.