பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

பதிற்றுப்பத்து தெளிவுரை

விரும்பினால், அதற்கேற்ற சமுதாய நிலைக்களன்களையும் முயன்று மக்கள் உருவாக்கவேண்டும். இதனை உறுதியாக உரமோடு அனைவருமே உளங்கொள்ளலும் வேண்டும்.

அக்காலத்து அரசர்களும் வள்ளல்களும் தலைவர்களுமாகிய பலரையும், சான்றோர் பலரும், பற்பல சமயங்களிற் போற்றுதலாகவும், அறிவுறுத்தலாகவும் பாடிய தனித்தனிச் செய்யுட்களின் தொகுப்பே புகழ்சால் புறநானூற்றுப் பெரு நூல். அங்ஙணமல்லாது, பழந்தமிழ் மூவேந்தருள் முதலாவதாக வைத்துக் கூறப்பெறுவோரும், தொன்றுமூத்த தொல் குடியினருமான சேரவரசருள் பதின்மரைப் போற்றுமுகத்தான், பதின்மர் புலவர்கள் பாடிய பத்துப்பத்துப் பாடல்களின் தொகுப்பே இப் பதிற்றுப்பத்து ஆகும். -

ஒரு பொருளைக் குறித்துப் பத்துப் பத்தாகச் செய்யுள் செய்யும் பதிக மரபுக்கு முன்னோடியாகவும், நூறு செய்யுட்களாக ஒரு நூலை அமைக்கும் சதகமரபுக்கு முதனூலாகவும், அந்தாதியாகத் தொடுக்கும் அந்தாதி மரபுக்கு அடிப்படையாகவும் அமைந்து, தமிழிலக்கிய வரலாற்றினைப் புதுப்போக்கில் உருவாக்கிய தனிச்சிறப்பையும் இப் பதிற்றுப்பத்துப் பெற்றிருக்கின்றது.

பிற்காலத்தே தோன்றிய கல்வெட்டுக்களிலும், உலா போன்ற பிறவற்றிலும் காணப்படும் மெய்க்கீர்த்திகளுக்கும் இதுவே முன்னோடியாகும் என்று கருதலாம்.

இனி இந்நூலின் செய்யுட்களுக்கு வகுத்துக் குறிக்கப் பெற்றிருக்கும் வண்ணமும் தூக்கும் இவை இசையோடு, பாடிப் பயிலப்பெற்று வழங்கிய சிறப்பினையும் காட்டும்.

சேரவரசர்களுள், இப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முதல்வனாக் கொண்ட குடியினரையும், சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையை ஆதியாகக் கொண்ட குடியினரையும் பற்றிய செய்திகளையே விரித்துக் கூறுகின்றன.