பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கார் ஓடிக்கொண்டிருந்தது.

யதேச்சையாகத் திரும்பினார் செந்தில்நாயகம். உழைப்பாளிகளின் சிலைக்கருகில் அப்போது மஞ்சள் வெய்யிலில் நனைந்தவாறு, யாமினி தன்னந்தனியாக நின்றுகொண்டிருக்கக் கண்டார். கதவைத் திறந்துகொண்டு, புதையல் எடுக்க ஓடுபவர் போன்று ஒரே புளகிதத்துடன் ஓடினார். "யாமினி"என்று அலட்டிக்கொண்டே போய் நின்றார். மூச்சு வாங்கியது. சமயோசித புத்தியுடன் கையில் வைத்திருந்த அந்த விளம்பரத்தாளே எடுத்து அவளிடம் சமர்ப்பித்தார். அவரது புருவங்களில் நடுக்கம் வளர்ந்தது. விழிகள் கண்ணீரில் புரண்டன.


சோகமே உருவாகத் தலைதாழ்த்தியவாறு நின்ற யாமினி அதைப் பார்த்தாள். 'ஏன்?' என்ற பாவனையில் முறைத்துப் பார்த்தாள். சடக்கென்று அவரது அலங்கோலம் நிறைந்த பரிதாபக் கோலம் கண்டு மனம் மாறியோ என்னவோ, 'ம்’ கொட்டிவிட்டு, 'நாளைக்குப் பகலில் வருகிறேன்!” என்று மொழிந்து, தெய்வமாய் மறைந்துவிட்டாள்.