பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
97

வந்துள்ளன. அவற்றுள் ஒன்று ‘தாசில்தார்’ என்னும் நாடகம். இதன் ஆசிரியர் மாவட்ட நடுவராக (District Munsift) இருந்தவர். அரசாங்க ஊழியர்களில் சிலர் நடந்து கொண்ட வகையை நேரில் கண்டு கண்ணீர் வடித்தவர் எனத் தெரிகிறது. இதன் முதல் பதிப்பு 1857லும் இரண்டாம் பதிப்பு 1868லும் வெளி வந்துள்ளன. இந்நூல் அவர் மகனாரால் வெளியிடப் பெற்றுள்ளது. அவரும் ஓய்வுபெற்றிருந்தார் எனக் காண்கின்றாேம். நூலின் முகப்புப் பக்கத்தில் பின்வரும் குறிப்பு உள்ளது.

தாசில்தார் நாடகம்

சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் இயற்றியது

இஃது கோயம்புத்துார் ஜில்லா உடுமலைப் பேட்டை முனிசீபாயிருந்து இப்போது கெவர்ன்மெண்டு உபகாரச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிற சைதாபுரம் காசிவிஸ்வநாத முதலியார் அவர்களாலியற்றப்பட்டு அவர் புத்திரனாகிய சோமசுந்தர முதலியாரது 'ஸ்டார் ஆப் இந்தியா பிரஸில்' இரண்டாவது முறை அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.
௲௮௱௰௮ ௵ ஜனவரி மாதம்.
103, Armenian Street,
Copy right.

இந்த முதற் பக்க விளக்கம் அக்கால உரைநடைக்கும் சான்றாக அமைகின்றது. இதன் முன்னுரையில் ஆசிரியர் இந்நாடகம் எழுத நேர்ந்த வரலாற்றைக் கூறுவதும் அறிய வேண்டுவதாகும்.

முகவுரை: சிலர் ஒரு எருமையானது தண்ணீர் குடிக்கப் போன குட்டையைக் கலக்கிச் சேராக்கித் தன்னுடலெலாஞ் சேற்றைப் பூசிக்கொண்டு நடக்கிற வழியெலாஞ் சேறாக்கி, வழியிற் போகிறவர்கள் வருகிறவர்கள் பேரிலுஞ் சேற்றைப் பூசித்