பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
101
இந்நூல் இராபர்ட்சன் என்பவரால் இங்கிலீஷில் எழுதப்பட்ட அமெரிக்கக் கண்டத்தின் சரிதத்திலிருந்து எடுத்தெழுதப்பட்டது. இஃது சென்னப் பட்டணம் யூனிவர்சிடி என்னும் சாஸ்திரக் கல்விச் சாலையில் இங்கிலீஷ் முதலிய பாஷையைக் கற்கும் மாணாக்கரில், இங்கிலீஷ் பாஷையிலிருந்து யாதொருபயோகமான நூலைத் தமிழ் முதலிய பாஷைகளில் நன்றாக எழுதுவோருக்கும் அளிக்கப்படும்படி கா. பச்சையப்ப முதலியார் அவர்கள் தருமத்தை விசாரணை செய்யுஞ் சபையாரால் மேற்படி சாஸ்திரக் கல்விச்சாலை அக்கிரா சனாதிபதி அத்தியக்ஷர் களிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் தொகையில் விலைபெற்ற புஸ்தகங்களைப் பெறும்படி இந்த வருஷாரம்பத்தில் என்னால் எழுதப்பட்டது: (1852)

என்று விளக்கந்தருக்கின்றார். எனவே அக்காலத்திலேயே பாடநூல்களைத் தமிழாக்குவோருக்குப் பரிசளிக்கப் பச்சையப்பர் அறநிலையத்தார் இப்பல்கலைக் கழகத்தாரிடம் ஒரு தொகையைத் தந்துள்ளார்கள் எனக் காண்கிறோம். அது பற்றி ஆய்ந்து அறிதல் தேவையான ஒன்று.

சம்பந்த முதலியார் நாடகங்களுடன் வைத்து எண்ணத் தக்க வகையில் பல நாடகங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றின. அவற்றுள் பிரதாப சந்திர விலாசம் என்பது சமூக சம்பந்தமான ஒன்று. ப. வ. இராமசாமி ராஜூ, பி. ஏ., பாரிஸ்டர்-அட்-லா என்பவர் எழுதிய நாடகம் இது. இது எழுதப்பெற்ற காலம் திட்டமாக அறிய முடியாவிட்டாலும் அவர் மறைவு 17—8—1897 என அறிவதால் அதற்கு முன்பே இது எழுதப்பட்டது என்பது துணிபு. இத்தகைய நாடகங்களன்றி வள்ளியம்மை நாடகம், இடம்பாச்சாரி விலாசம், மதனசுந்தர பிரதாப சந்தான விலாசம் முதலிய சுமார் 35 நாடகங்கள் நாட்டில் வழக்கத்தில் இருந்தன. இவை அனைத்தும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவின என்பது கண் கூடு.