பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
115

சாரி என்பார் ‘விதவோத்வாக கண்டனம்’ என்ற நூலை எழுதி அச்செயலைக் கண்டித்திருக்கிறர்.

கணவனை இழந்த கைம்பெண்ணைச் சுற்றி அழுவதைப் பற்றிய குறிப்பு ஒன்று அமரம்பேடு முத்துசாமி முதலியார் எழுதிய சமூக இயல் பற்றிய ‘அபிமானம் என்பது என்ன?’ என்ற 1886இல் வெளியான நூலில் உள்ளது. இதுபோன்றே வாழ்வியலைப் பற்றிய பல குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

அழுகை:- பெண்கள் மயிரிழவு, மாரிழவு, காலடவு, கட்டியழல் என்னும் ஆசாரங்களை நடத்துகையில், கட்டியழும் போது வாசல் பெரிதாயிருக்குமாயின், திட்டுதிட்டாகப் பத்துப் பதினைந்து பேர் வட்டமாக நின்று, கைகோத்து அசைந்தாடி ஒருவித ராகத்தோடு பாடிக் கொண்டு, கொஞ்ச காலங் கழிந்த பிறகு, வேறு நடைச் சந்தத்தோடு பாடிக்கொண்டு, காலடவு போட்டு மார்பிலடித்துக் கொண்டு சுற்றி வருகையில் புதிதாய்க் கற்றுக் கொள்ளுகிறவளாவது விதரணை இல்லாதவளாகவாவது இருந்து, அடவு சரியாய்ப் போடாதவளைக் கையைப்பிடித்திழுத்து வெளியில் விட்டு விடுகிறர்கள். இழவுக்கு அழப்போகையில் தலைமயிரை சிக்கலில்லாமல் உடைத்துக் கோதிக்கொண்டு போய், எதிரெதிர் முகமாக நின்று, எதுகை மோனை தவறாமல் அதற்கிசைந்த வேறு ராகத்துடனே பாட்டுக்கள் பாடிக்கொண்டு தலைமயிரை இரண்டு கைகளாலும் விரல்களைக் கொண்டு சீவுகிறார்கள். கணவனைப் பறிகொடுத்துத் தவிக்கின்றவளைக் கீழே தள்ளி மற்றவர்கள் அவளைச் சூழ்ந்து ‘லபலப'வென்று வாயிலடித்துக் கொள்ளுகிறர்கள். மார்மேலிருக்கும் துணியை எடுத்து இடுப்பில் வரைந்து கட்டிக் கொண்டும் மார்பிலடித்துக் கொள்ளுகிறார்கள்.