பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சொற்பொழிவு—க— (15-2-1965)

முன்னுரை

பேராசிரியர் அவர்களே! பெரியோர்களே!

மறைந்த திருவாளர் ‘கல்கி’ அவர்களுடைய நினைவுச் சொற்பொழிவினை எனக்கு இப்பல்கலைக் கழகத்தார் அளித்து, இவ்வாண்டு என்னைப் பேசுமாறு பணித்துள்ளார்கள். முதலாவதாக அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இச் சொற்பொழிவுத் தொடருக்கு அமைந்த பொருள், ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நடை வளர்ச்சி’ (Development of Tamil Prose in the 19th Century) என்பதாம் நூற்றாண்டில் உரைநடை வளர்த்த பெருமைக்குரிய ‘கல்கி’ அவர்களின் நினைவுச் சொற்பொழிவு அல்லவா! அவர் வாழ்ந்த நூற்றாண்டிற்கு முன் இருந்த உரைநடை வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதாக அமைதல் பொருந்து வதுதானே? ஒரு நூற்றண்டில் நம் மொழியில் உண்டான நூல்கள்-இலக்கிய நூல்கள்-எண்ணில. அவற்றுள் உரை நடை நூல்களாகவும் இதழ்களாகவும் ஏடுகளாகவும் வேறு பலவகைகளாகவும் அமைந்தன உள்ளன. அவை அனைத்தும் உரைநடை வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ளனவேயாம். இங்கு அவற்றை ஆராய்ந்து பார்ப்பதன் முன். ‘தமிழ் இலக்கிய வளர்ச்சி’ காலங்கடந்த வரலாற்று எல்லையை உடையதாகையால், அக்கால அளவில் இவ்வுரைநடை தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிய வேண்டுவதும் இன்றியமையாததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் கால்வைப்பதன்முன், அதற்கு முன் பல நூற்றண்டுகளில் இவ்வுரை நடை எவ்வாறு தோன்றி வளர்த்து வளம்பெற்று வந்ததென்பதைக் காணல் ஏற்புடைத்தாகும்.