பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
121

இவ்விதழில் இந்து தேசசரித்திரம், பிரபஞ்ச நூல் (நில நூல்),காரிகை, விலங்கியல், பஞ்சதந்திரக் கதை, கல்விப் பொருள், புதினச் செய்திகள் முதலியன இடம் பெற்றுள்ளன. பஞ்சதந்திரக் கதையும், புதினச் செய்திகளும் ஆங்கிலத்திலும் எழுதப்பெற்றுள்ளன. சில தனித்த ஆங்கிலக் கட்டுரைகளும் உள்ளன.

பத்திரிகை பற்றி அதன் குறிப்பு: உதய தாரகை பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மார்க்கம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகளைப் பற்றியும் அச்சடிக்கப்படும். அது தமிழ்ப் பாஷையிலும் இடைக்கிடையே தமிழும், இங்கிலிசும் கூடினதாயும் எட்டுப்புற முள்ளதாக நான்காய் மடித்த தாள் அளவில் ஒவ்வொரு மாதம் முதலாம் மூன்றாம் வியாழக்கிழமைகளில் பிரசித்தம் பண்ணப்படும்.

இதன் விலை பத்திரம் ஒன்றுக்கு 2 பென்சு அல்லது ௰௬ வெள்ளைச் சல்லி அல்லது மூன்று மாதத்திற்கும் மூன்றைக் கொடுத்திருந்தால் அப்பத்திரங்களின் விலை ஒரு சிலிங்கு.

இவ்வாறு அதன் விளக்கம் விரிந்து கொண்டே போகிறது.

இது இதழ் உரைநடைக்கு ஒரு சான்றாகும்.

தமிழ் நாட்டு இதழ்களும் இந்த அமைப்பிலேயே சென்றன. சில சமய வளர்ச்சிக்கும், சில பெண்கள், இளைஞர் பகுதிக்கும், சில தத்துவம் போன்றவைகளுக்கும் சிறப்பாகப் பயன்பட்டன. அவற்றுள் ஒரு சிலவற்றை உடன் தொகுத்துள்ளேன். இன்னும் பல நாட்டில் உலவின என்பது தேற்றம்.

8