பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10

தமிழ் மொழி

தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வளம் பெற்ற மொழியென்பதும், அவர் காலத்துக்கு முன்பே இம்மொழியில் உரைநடையும் பாட்டும் பல்கி இருந்தன என்பதும் அவர்தம் நூல் வழியாகவே நம்மால் அறிய முடிகின்றது. தமிழில் உரைநடை என்று தோன்றிற்று என வரையறுக்க முடியாது. அதன் வரலாற்றை ஆயு முன் உரைநடை என்பது என்ன என்பதையும் அது வாழ்வின் தேவையை எவ்வெவ்வாறு நிறைவு செய்கிறது என்பதையும் ஆராயவேண்டுவதும் தேவையான ஒன்றல்லவா?

எது உரை நடை?

எது உரை நடை? ஏன் உரை நடை? இவை பதில் இறுக்கப்பெற வேண்டிய வினாக்கள், தமிழில் மட்டுமின்றி ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலும் இத்தகைய கேள்விகளுக்கு விடை காணல் தேவையே. மேலைநாட்டு ஆய்வாளர்களுள் சிலர் இவற்றிற்குரிய விடைகளையும் ஆய்ந்து கண்டு அறுதியிட்டு எழுதியுள்ளார்கள். மனிதன் பிற உயிரினத்தினும் வேறுபட்டவன்; தன் உள்ளக் கருத்தை உடன் வாழும் மற்றவருக்கு உணர்த்தக் கடமைப்பட்டவன். வாய் திறந்து பேசும் வாய்ப்பு இவனுக்கு உண்டு அந்த வாய்ப்பே ‘மொழி' என்ற ஒன்றை உலகுக்கு அளித்தது. இருபதாம் நூற்றாண்டின் இடைபட்ட நாகரிக உலகில், மொழி அடிப்படையில் பல்வேறு சண்டைகளை நாம் காண்கின்றாேமாயினும், இந்த மொழியே மனிதனை மனிதனாக வாழ வழி காட்டி வழி வகுத்து, வாழ வைத்த ஒன்று என்பதை நம்மால் மறக்க முடியாது. இந்த மொழிகளின் அமைப்பு நாடுதோறும் வேறுபடுவது என்றாலும், மொழி சமுதாயத்தை இணைக்கும் ஒரே சாதனம் அல்லது கருவி என்பதை யாராலும் மறுக்க இயலாது. இம்மொழிகள் தத்தம் தோற்ற வளர்ச்சி அடிப்படையில் சிறந்தும் சிதைந்தும், வளர்ந்தும் வாடியும், உயர்ந்தும் தாழ்ந்தும் இன்று உலகில் உலவுகின்றன. நல்ல திருந்திய மொழி