பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
131

சமயம் நாட்டில் இடம் பெறலாயிற்று. பின் அதுவே சைவம், வைணவம் ஆகிய இரண்டனையும் உள்ளடக்கிக் கொண்டதோ என்னுமாறு நாட்டில் ஆதிக்கம் செலுத்திற்று. அதை அடுத்துப் பெளத்தமும் சமணமும் தமிழ் நாட்டுக்குவடக்கிலிருந்து வரலாயின. அவை தாமும் இந் நாட்டுத்தனிப்பெருஞ்சமயங்கள் என்னுமாறு ஒன்றன்பின் ஒன்றாகக் கி. பி. மூன்றாம், நூற்றாண்டு தொடங்கி ஏழாம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தின. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவமும், வைணமும், வைதிக சமயமும் தலைதூக்க, அவை இரண்டும் நிலைகுலைந்தன. பெளத்தம் ஓரளவு நாட்டிலே அடியோடு இல்லை என்னுமாறு அழிந்தது; எனினும் சமணம் இலைமறைகாயென நாட்டில் ஆங்காங்கு உயிர் வாழ்ந்து வந்துள்ளது; இன்றும் வாழ்கின்றது அதன் வழித் தோன்றிய இலக்கிய இலக்கணங்களும் வாழ்கின்றன.

பின் இசுலாமிய மதமும் கிறித்தவமும் கடல்வழியே தமிழ் நாட்டில் புகுந்தன. மிகப் பழங்காலத்திலேயே மத்தியதரைக் கடல் நாடுகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு வாணிபத்தின் பொருட்டு வந்தவர் வழி இவ்விரு சமயங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகமானவை எனினும், அவை நாட்டு மக்களொடு-அவர் தம் வாழ்வொடு-பொருந்திக் கலக்கவில்லை. பின் ஆணை வழி முகலாயரும் மேலை நாட்டினரும் தமிழ் நாட்டில் ஓங்கிய நாட்களில் தாம் அவை மக்கள் சமயங்களாக இடம் பெற்றன.

இவையே யன்றி இந்து சமயக் கிளைகளாகிய வேதாந்த மதம் முதலிய சிற்சிலவும் நாட்டில் தோன்றி வளர்ந்தன, எனவே, தமிழ் நாட்டிலே சென்ற நூற்றாண்டில் சைவம். வைணவம், வைதிகம், வேதாந்தம், கிறித்தவம், இசுலாம், சமணம் ஆகிய மதங்கள் வாழ்ந்து வந்தன. (இவற்றுள் சமணம் அவ்வளவு அதிகமாக இல்லை.) எனவே இச்சமயங்களைப்பற்றிய இலக்கியங்கள் நாட்டில் அதிகமாக வளர்ந்து வந்தன என்பதும் சொல்லாமலே அமையும்.