பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

களுள் பல்வேறு இலக்கியங்கள் வாழ்கின்றன். கடந்த கால வரலாற்று வாழ்வையும் இயற்கை வளத்தையும் காட்டி, அன்று வாழ்ந்த மக்கட் சமுதாயத்தையும் இன்று வாழும் நம்மையும் வருங்காலச் சமுதாயத்தையும் வாழ வைப்பனவே இலக்கியங்கள். இந்த அடிப்படையில் தோன்றிய இலக்கியங்களே காலத்தை வென்று வாழ்வன. மற்றவை ...? நாம் சொல்ல வேண்டா.

இவ்விலக்கிய அடிப்படைகளாக அமைந்தனவும் பேச்சு வழக்கில் உள்ளனவுமாகிய உரையும் பாட்டும் நாம் எண்ணத்தக்கன. உரை என்றால் என்ன? இந்த 'உரை' என்ற சொல் நெடுங்காலமாகவே தமிழில் வழக்கத்தில் இருந்து வருகின்றது. 'உரைக்கப்படுவது உரை' என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிடலாம். 'உரை' என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளமை அறிஞர் அறிந்ததே. முதல் முதல் வெறும் ஒலிக்கே இந்த உரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டதென்பதை உணர்கின்றாேம் 'குன்றம் குமுறிய உரை' (பரிபாடல்,8-35) என்றே பரிபாடல் காட்டுகின்றது. விண்ணின்றிரங்கித் தண்மழை பொழியும் எழிலி தன் வரவுகாட்ட எழுந்த ஒலி அது. அது உரைக்க மழை வரும் என்பதை உலகம் உணர்கின்றது. இந்த வகையில் மக்களுக்கு உணர்த்தட உணர்வினை அளிக்கப் பயன்பட்டது-பயன்படுவது உரையாகும்.

உரை என்பது பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பதாகும். இதை விளக்க ஒரு சான்று பயன்படும். தட்டான் பொன்னுக்கு உரை காணும் வழக்கம், பலகட்டுப்பாடுகளுக்கிடையில், நம் நாட்டில் இன்றும் உள்ளத்தை அறிவோம். பொன் சிறந்ததா இல்லையா என்பதை-அதன் உண்மை நிலை, பண்பு, தரம் முதலியன இன்ன வகையன என்பதை-உரைத்துக் காண்பது நாடறிந்த ஒன்று. அதன் தன்மையை உணர்த்தும் கல்லுக்கு 'உரை கல்' என்றே பெயர் உண்டு அல்லவா? எனவே பொருள்களின் இயல்பை உள்ளது உள்ளவாறே உலகுக்கு உணர்த்துவது உரை