பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
150

இவ்வாறே காஞ்சிபுரம் சபாபதி முதலியார் முதலிய பலர் சைவ சமய நெறி பற்றி விளச்கமான நூல்களை உரை நடையில் எழுதியுள்ளனர். அவை அனைத்தையும் ஈண்டுக் குறித்தால் அளவிலாது பெருகுமாதலின் இந்த அளவோடு இதை நிறுத்தி, இவர்களே பிறசமயத்தாரோடு மாறுபட்டும் பிற நெறியாளர் சைவத்தைப் பழித்த முறைகளை மறுத்தும், தர்க்க நெறியிலும் எழுதிய நூல்களுள் சில கண்டு அமையலாம்.

சோமசுந்தர நாயகர் பற்றியும் அவர்தம் புலமை பற்றியும் அவருடைய மாணவரும் நமக்கெல்லாம் அறிமுகமானவருமான மறைமலையடிகள் 1900 இல் எழுதிய சோம சுந்தரக் காஞ்சியாக்கத்தின் முன்னுரையால் நாட்டில் இருந்த சமயமாறுபட்டு நிலையும் தர்க்க முறையும் நன்கு புலனாகும்.

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்;

முதற்பதிப்பின் முகவுரை;

எமக்குச் சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்த நூற் பொருள் செவியறிவுறுத்தி இத்தென்னாடு முழுவதூஉம் அச்சித்தாந்த சைவப் பொருண்மரபெல்லாம் வகுத்தெடுத்துக்கொண்டு உபந்நியாசங்களாலும் நூற்களாலும் பலகாற் பலரு முய்யுமாறு விளங்கக் காட்டி ஓர் அரியேறு போல் யாண்டும் நிகரற்றுலாவிய எங்குரவர் ”சைவசித்தாந்த சண்டமாருதம்” ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக வள்ளல் சிவசாயுச்சியமுற்ற ஞான்று அப்பெருந்தகையார் பிரிவாற்றாது எம்மிடை நிகழ்ந்த கையறவு தெரித்து யாமியற்றிய 'சோமசுந்தரக் காஞ்சி'யின்மேல்ஒருசில போலிப்புலவன்மார் வழுவளைந்த போலி மறுப்பொன்று வெளியிட்டனராக, மற்றதனைக் கண்ட எம்மாளுக்கர் ஒருவர் அப்புலவர்க்குப் பொய்யறிவு களைந்து பொருளியன்மெய்யறிவுகொளுத்தன் வேண்டியும்