பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
153

குதர்க்க வாத விபஞ்சனி (1876):

ஏ சூளை நாயகன் அடிமையே! நின்னாசிரியர் சீவகருணையே தமது கொள்கையெனற் கியைந்து உத்தம வாதமென்னுஞ் சுவடியை யெழுதின ரென்று நீ கூறி யழுதனை. ஐயோ கொடுமையே! நின்னாசிரியர் புலாலை விரும்பி யுண்ணு மசைவ ரென்பது அவருடைய ஸ்வபந்துஜநப் பிரசித்தியாயின் அதனை நீயேனோ மாற்றத் தலைப்பட்டனை? இது நின்னிடத்து மஹாபாரதமேயாம். 'பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி, யாங்கில்லை யூன்தின் பவர்க்கு' என்றருளின பொரியோனருமைத் திருவாக்கை யுத்துணரப் பெறாத மருட்போத சீலரைச் சிவகருணையுடையவரென்று நீ வியந்து கூறுமாற்றால் தீயவற்றை நல்லனவாகக் கொண்டொழுகும் புல்லறிவாளரிற் றலைமகனாக நிச்சயிக்கப்பட்டவ னாயினை, அகங்காரத் திமிர்ப் புடையணாகிய உனதாற்றலும், உன்னைத் தூண்டி வெளியே விடுத்து மறைந்து கிடப்பராகிய உன தாசிரியராற்றலும் வெட்டவெளியாகுங் காலம் சமீபித்தது போலும்.

இதே முறையில் இராமலிங்க அடிகளாருடைய ‘அருட்பா'வினுக்கு யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையினுடைய 'மருட்பா’ வாதம் பற்றிய உரைநடை வெளியீடுகளும் கட்டுரைகளும் சில இருந்தன எனத் தெரிகிறது. இவ்வாறு ஒரே சமயத்தும், இந்து சமயமெனும் கூட்டுச் சமயத்தில் உள்ள பல கொள்கைகள் பற்றிய வாதப்பிரதி வாதங்களும் நிகழ்வது ஒருபுறமிருக்க, நாட்டில் புதிதாக வந்த கிறித்துவச் சமய மறுப்பான வாதங்களும் சில எழுந்தன. அவற்றுள் ஒன்றை மட்டும் கண்டு அமைவோம்.

கிறிஸ்துமத கண்டனம்—ஸ்ரீசிவசங்கர பண்டிதர்—1882

கடவுள் முதற் காரணர். அவர் படைத்த ஆதி மனுஷரை விவேகமில்லாதவராக ஏன் படைத்தார்?