பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
159


இதன் உரை:—கேளாய் ஜீவனே? நித்தியமும் அநித்தியமும் என்பன யாவையோவெனில் அனந்தக்கியானகி அஷ்ட குணங்கள் நின் கண்ணே பெறலாய் நின்றன. போய் நாட வேண்டாமவையே நித்யமாகுமன்றி நீ கொண்டு நின்ற சரீராதி புத்திரமித்திர களத்திர தனத்ரன்னிய முதலாய வஸ்துக்களெல்லா மனித்திய மாக மஃதெவ்வகையெனில்.

எனக்கூறி மேலுள்ள பாட்டைக் காட்டுவர்.

இவ்வாறு பாட்டிலும் உரை அதிக விளக்கம் தேவையான வகையில் உள்ளது.

இசுலாம்

சென்ற நூற்றாண்டில் இசுலாம் பற்றிய நூல்கள் பலவும் தமிழில் வெளிவந்துள்ளன. இச்சமயம் பற்றி அரசாங்கப் பதிப்பு வரையறைக்குட்பட்ட வகையில் முப்பத்தேழு ஆண்டுகளில் சுமார் 150 நூல்கள் அச்சிடப்பெற்றுள்ளன. அவைகளுள் பெரும்பாலான செய்யுளாகவே உள்ளன. சென்ற நூற்றாண்டில் அச்சுச் சாதனத்தைப் பயன்படுத்திய வகையில் அச்சமயத்தினரும் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். வேற்று மொழிகளிலிருந்து பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து இங்குள்ளார் தம் சமயத்தை அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டனர். தோத்திரப் பாடல்களாகவும் பல நூல்கள் வெளிவந்தன. பிற சமயங்களைக் குறைகூறும் வகையில் அமைந்த நூல்களும் சில. தமிழிலே எழுதப்பெற்றனவாயினும் பல அராபிய பர்சியச் சொற்கள் அவ்வாறே எடுத்தாளப் பெறுகின்றமையின், அச் சமய உண்மைகளை ஓதி உணர்ந்தாற் கல்லது மற்றவர்களுக்கு எளிதில் புலனாகாவாறு பல நூல்கள் அமைந்துள்ளன. ஒருசிலவற்றின் முன்னுரைகளையும் அச்சிட்ட வரலாறுகளையும் காணலாம்.