பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
183

சொல் வளங்களும், பல பழமொழி விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூலுள் உள்ள ஒரு பாடல் விளக்கம் காண்போம். ஒளவையின் பாடலின் விளக்கம் அது.

‘நன்றி ஒருவருக்கு': நல்ல குணத்தை உடையவராகிய ஒருவருக்கு(ச்) செய்த உபகாரமானது கருங்கல்லின் மேல் எழுத(ப்)பட்ட எழுத்து(ப்) போல நெடுங்காலம் விளங்கும்; ஒழிந்த அன்பில்லாத ஒருவருக்கு(ச்) செய்த உபகாரம், நீர்மேல் எழுத(ப்)பட்ட எழுத்து(ப்) போலச் செய்த அப் பொழுதுதானே அழியும். ஆதலால் எந்த(க்) காலத்திலும் நல்லோருக்கே உபகாரம் செய்தல் வேண்டும்.

பல பாடல்களுக்கு விளக்கங்களை இவ்வாறு மேனட்டவரும் நம்மவரும் செய்துள்ளனர். ‘கம்பராமாயண அருங்கவி விளக்கம்’ என்ற பாட்டின் உரைவிளக்க நூல் ஒன்று கவித்தலம் துரைசாமி மூப்பனரால் 1888 இல் எழுதி வெளியிடப் பெற்றுள்ளது. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட பலர் இதற்கு முகவுரை தந்துள்ளனர். இந்நூலில் பல பாடல் விளக்கங்களும், தெளிந்த உரை நலமும் காணப் பெறுகின்றன.

‘திராவிட சப்த தத்துவம்’ என்ற மொழியியல் பற்றிய இலக்கண நூல் ஒன்றும் சென்ற நூற்றாண்டில் வெளிவந்துள்ளது (1899). இந்நூல் சென்னப்பட்டணம் சர்வகலா சாலை சமஸ்கிருத புரொபஸர்-மிட்டாதார்-எம்.ஏ.சேஷகிரி சாஸ்திரியாரால் இயற்றப்பெற்றது. முன்னுரை ஆங்கிலத்தில் உள்ளது. ஓரிரு பகுதிகள் காணலாம்.

வினையின் உறுப்புக்கள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, எதிர்மறையுருபு என ஐந்து. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை இவை உடன்பாட்டு வினையில் வரும். எதிர்மறை வினையில் எதிர்மறையுருபும் வரும்.