பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
184


தமிழில் சொரூபத்தில் செயப்பாட்டுவினை கிடையாது. பொருளால் அடியுண்டான், அடிக்கப் பட்டான் என்பனவற்றைப் போல்வன வரும். அவை பகுபத வுறுப்பாய் இரு சொல் அடங்கிய தொடர்வினைகளே யன்றித் தனிவினைக ளல்ல.

இவற்றில் உள்ள அடிப்படை மாறுபாடுகளும் சில விளங்குகின்றன. இவ்வாறே வேறு பல துறைகளிலும் உரைநடையில் நூல்கள் வந்துள்ளன.

மேலை நாட்டவர் தொண்டு

கடைசி எல்லைக்குச் செல்லுமுன் சென்ற நூற்றாண்டில் நம்மொடு இருந்து தமிழ் உரைநடையை வளம்படுத்திய மேலை நாட்டு அறிஞரைப் பற்றி எண்ணக் கடமைப் பட்டுள்ளோம். இவருள் மிக முக்கியமாக எண்ணத்தக்கதர்கள் டாக்டர் போப் அவர்களும் கால்டுவெல் அவர்களுமாவர். டாக்டர் போப் அவர்கள் குறள், நாலடியார் முதலிய சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடன்றி, திருவாசகம் முதலிய தெய்வநெறி நூல்களை மொழி பெயர்த்துத் தந்ததுமன்றி, பல இலக்கண நூல்களை எழுதி ஆங்கில நாட்டவரும்-ஏன்?-நம் நாட்டு இளைஞரும் நன்கு உணரத்தக்க வகையில் வெளியிட்டுள்ளார். அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்திய திருக்குறள் நூலில் திருவள்ளுவர் சரித்திரம் உரைநடையில் எழுதப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதி இதுவாகும்.

அச்சங்கத்தார் உக்கிரப்பெருவழுதியென்னும் பாண்டியன் முதலானவர்களும் அத்யந்தம் ஆனந்தமடைந்து வெகு பூஜிதம் பண்ணி இந் நூலை அகஸ்தியரும் ஒப்புக்கொள்ளில் நல்லதென்ன விடை பெற்றுப் பொதியமலைக்குப் போய் அகஸ்தியர் முதலானவர்களைக் கண்டு தாஞ்செய்த நூலைக் காண்பிக்க அவர்கள் அடைந்த சந்தோஷத்தையும் புகழ்ந்த பாடலையும் அனந்தனாலுஞ் சொல்ல முடியாது,