பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
185


அவ்விடத்தில் கொங்கண சித்தர் வழிபட அவருக்கனுக்கிரகஞ் செய்து நாயனர் அவர்களிடத்தில் உத்தரவுபெற்றுத் தாம் முன்பு போம் போது வழியினேர்படாத ஸ்தலங்களையெல்லாஞ் தரிசனம் பண்ணிக்கொண்டு திருமயிலைக்குச் சமீபமாக வருவதை அப்பதியாரும் ஏலேலசிங்கரும் கேளவிப்பட்டு எதிர்கொண்டுபோய் அழைத்து வந்தார்கள். அவரும் வந்து தமதில்லறத்தில் வாசுகிமாதினொடு மிருந்தார்.

இக் கதைகளெல்லாம் படித்துக் குறளை உணர்ந்தே பின் சிந்தித்து, அவர்தம் அழகிய மொழிபெயர்ப்பினைச் செய்தார். அவரது இலக்கண நூல் நடைக்கு ஓர் எடுத் துக்காட்டு (1857).

எழுத்துப்புணரியல்: விகாரம் என்பதென்ன? மொழியோடு மொழி, வேற்றுமை வழியிலாவது, அவ்வழியிலாவது, பொருந்தும்பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்தாகிலும் வருமொழியின் முதலெழுத்தாகிலும் அவ்விரண்டெழுத்துக்களுமாகிலுந் திரிவதும் கெடுவதும் வேறே எழுத்துத் தோன்றுவதுமே விகாரம் எனப்படும்.

விகாரம் ஒன்றும் பலவும் வரப்புணர்வது விகாரப் புணர்ச்சியாம். விகாரம் இன்றிப் புணர்வது இயல்புப் புணர்ச்சியாம்.

சென்ற தலைமுறையில் வாழ்ந்தவர்களுக்குத் தங்கள் தமிழ்க் கல்வியைத் தொடங்கும்பொழுது இலக்கணத்தை அறிமுகம் செய்து வைத்தது போப் ஐயர் தமிழ் இலக்கணமேயாம், இவ்வாறு இலக்கணத்தைத் தெளிவுடன் எழுதிய போப் ஐயர் அவர்கள் நாட்டு வரலாறு எழுதுவதிலும் வல்லவர் என்பதற்கும் ஒரு சான்று காணலாம்.

12