பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19

கலந்து பொருந்தப் பாட்டு உருவாயிற்று. மேலும், தாம் விளக்க வந்த கருத்தினைப் பாட்டாக வடித்து வைப்பின் அப்படியே மனத்தில் பன்னெடுங் காலம் நினைத்து நிலை நிறுத்தவும் அப்பாட்டே பயன்பட்டது. உரைநடையை அப்படியே மனத்தில் உருவிட்டு நிலைநிறுத்துவதனினும் பாட்டினை மனத்திடைப் பதித்தல் எளிதல்லவா? எனவே, இவைபோன்ற பல காரணங்களால் பாட்டு உருப் பெற்றிருக்கலாம். மற்றும் உணர்வும் தெய்வநெறியும் பிற பண்பாடுகளும் வளர வளர, உளங் குளிர்ந்த போதெலாம் உணர்ந்துணர்ந்து பாடும் நெறியும் வளர்ந்திருக்கலாம். எனவே, உரைநடைக்குப் பின் பாட்டு வளரக் காரணங்கள் பல. விரிப்பிற் பெருகும்.


பாட்டிற்கு இருப்பது போன்று ஏன் உரைநடைக்கு இலக்கணம் இல்லை என்ற வினாவிற்கு விடை காணலும் தேவையே. உலகில் அன்றாடம் சாதாரணமாக நிகழும் செயல்களைப் பற்றி யாரும் எழுதி வைக்க விரும்புவதில்லையல்லவா? நாட்குறிப்பினைத் தவறாது விடாது எழுதுபவர்களும்கூட, அன்றாடம் முறையாகத் தாம்செய்யும் நித்தியக் கடன்களையும் எழுதுவது அரிதல்லவா? அந்த முறையிலே தான் இந்த உரைநடைப் பற்றியும் யாரும் எழுதி வைக்க விரும்பவில்லை. மக்கள் நாள்தோறும் ஒருவரை ஒருவர் காணும்போதும் கலக்கும்போதும் சாதாரண உரைநடையில் போசுவது மரபு. இப்பேச்சு வழக்கு இடந்தோறும்மாறுவது முண்டே! எனவே அவைபற்றி இலக்கண மரபினை ஏட்டில் எழுதாது எங்கோ யாரோ சில வேளைகளில் சிறப்பாக எழுதும் பாட்டினுக்கு மட்டும் இலக்கணம் எழுதி வைத்தார்கள். எனினும் உரையைப் பற்றிய பல்வேறு குறிப்புக்கள் பழங்காலத்திலேயே உள்ளமையை நாம் அறிகிறோம். தமிழில் மட்டுமின்றி, தமிழ் நாட்டோடு பழங்காலத்திலேயே தொடர்பு கொண்டிருந்த யவன நாடுகளிலும் இந்த வகையில் உரைநடைக்குத் தனி இலக்கணம் இல்லையாயினும், அது பற்றிய குறிப்புக்களைப் பரவலாகக் காண முடிகின்றது. கி.மு. ஐந்தாம் நூற்றண்டிலேயே கிரேக்க