பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20

இலத்தீன் மொழிகளில் உரைநடை இலக்கியங்கள் இருந்தன எனவும் அவ்வுரைநடை கண்டவருள் சிறந்தவர் சிசரோ[1] எனவும் நம்மால் அறிய முடிகின்றது.[2] இரு நாடுகளிலும் தோன்றி வளர்ந்து வாழ்ந்த இருவேறு வகைப் பட்ட (தமிழ், கிரேக்க) இலக்கியங்களில் உரையும் பாட்டும் இருந்தன என்பதை ஆய்வாளர் நன்கு அறிவர். ‘உரையும் பாட்டும் உடையோர் சிலரே' (புறம். 27) எனப் புறநானூறு இரண்டையும் இணைத்தே பேசுகின்றது. 'பாட்டும் உரையும் பயிலாதன இரண்டு, ஒட்டைச் செவி யும் உள’ என்ற பிற்காலப் பாட்டும் இதை வலியுறுத்துகின்றது. மேலும் தொல்காப்பியமும் வெளிப்படையாக உரைக்குப் பேரிலக்கணம் வகுக்கவில்லை என்றாலும் உரையின் தொன்மையைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை என்பதை முன்னரே கண்டோம். இவ்வாறு தொல்காப்பியர் காலந்தொடங்கி-ஏன்?-அதற்கு முன்பிருந்துகூட-இன்று வரை தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டே வருகிறது. இனியும் தொடர்ந்து வளரும் என்பதில் ஐயமில்லை.

வரலாறு எங்கே?

தமிழ் உரைநடை வளர்ந்தாலும் அதன் வரலாற்றைத் தொடர்ச்சியாக அறியமுடியவில்லையேஎன்பதை எண்ணும் போது சற்றே வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது. எழுதப்பெற்ற, வரையறுத்த திட்டமான வரலாறு இல்லையாயினும் தமிழில் உரைநடை மிகப் பழங்காலந்தொட்டே தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற ஒன்று என்பதைக் காட்ட ஆதாரங்கள் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த உரைநடையை நம்மால் காண முடியாவிட்டாலும், அந் நூற்பாவாலும் அதன் உரைகளாலும், அவ்வுரையின் விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறும், இன்றில்லாது, அழிந்த சில நூற்பெயர்களாலும் (இராம சரிதமும், பாண்டவ சரிதமும், பெருந்


  1. Cicero
  2. Encyclopaedia Britanicca, vol. 18, p. 593.