பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23

அதுகேட்டு, கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத்து, ஆங்கு 'அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம்பல பெருக்கி, பிழையா விளையுள் நாடாயிற்று.

அதுகேட்டு, சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து, 'எத்திறத்தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும்' என நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தம் விழாவணி நிகழ்வித்தோனே."

இவ்வுரைநடையைப் படிக்கும் யாரும் உள்ளத்து உயர்வு பெறுவரன்றே? இந்த அளவுக்குச் சிலம்பில் உரைநடை உயர்ந்திருக்கவேண்டுமாயின் அதற்கு முன் எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் அவ்வுரைநடை தவழ்ந்து, வளர்ந்து, தழைத்து, ஓங்கி, உயர்ந்து, உற்ற பெருநிலையில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றதன்றாே?

களவிய லுரை

காப்பிய காலத்துக்குப் பிறகு தமிழ் நாட்டின் இருண்ட காலம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளதை யாவரும் அறிவர். எனவே இலக்கியமும் அத்துணை ஏற்றம் பெறவில்லை என்பதைக் காணமுடிகின்றது. ஆகையால் உரை நடையின் நிலையையும் நம்மால் உணர்ந்துகொள்ள இயலவில்லை. எனினும், தமிழர் தம் வாழ்வும், வளமும், பண்பாடும், நாகரிகமும் பிறநாட்டார் படையெடுப்பாலும் பிற சூழல்களாலும் நீறுபூத்த நெருப்பென மங்கியிருந்து காலம் மாறிய நாளில் மறுபடியும் வீறுபெற்றமை போன்றே உரைநடையும் மங்கித் தவழ்ந்து எட்டாம் நூற்றண்டளவில் தன்னை விளக்க, ஒரு சிறந்த உரை நூலாக உருப் பெற்றது. இரண்டாம் நூற்றண்டை ஒட்டிய காலத்தில் தோன்றிய அவ்வுரைநடை, செவிவழியாக ஒருவர் வாய்