பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41

உயிராக்கங் காப்பது வேண்டியிக் குறட்பயனராய்
வது நன்றே.

இவ்வாறு மேலைநாட்டுக் கிறித்தவர்கள் பதினேழாம் நூற்றண்டிலும் அதற்குப் பிறகும் தத்தம் சமய உண்மைகளைப் பரப்பப் பல்வேறு வகையில் முயன்று உரைநடை நூல்களை எழுதிய ஞான்று இந்நாட்டில் தோன்றிய அறிஞருள் சிலரும் சிறந்த உரை விளக்கங் கண்டுள்ளமையினையும் நம்மால் அறிய முடிகிறது. அவருள் சிறந்தவர் ‘சிவஞான முனிவர்' ஆவர். இலக்கண இலக்கியத்திலும் சைவ சித்தாந்தச் சமய நெறியிலும் இவர் சிறந்த புலமை பெற்றவர். இவர்தம் சிவஞான போத உரை ‘சிவஞான பாடியம்’ எனப் போற்றப் பெறுகின்றது. ஒவ்வொரு துறையிலும் இவர் ஆக்கியுள்ள உரைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கும் நமக்கு நல்ல விளக்கங்ககளாக அமைகின்றன.

சமய இலக்கண சாத்திர நூல்கள்

சங்கரநமச்சிவாயர் நன்னூலுக்கு நல்ல உரை கண்டமை மேலே குறித்தோம். அந்த உரையோடு தம் கருத்தையும் நிரப்பி இவர் அந்த விருத்தியை முழுமை பெறச் செய்தார். அதில் ஒன்று காணலாம்:

மக்களாகப் பிறந்து புண்ணிய பாவ மியற்றிப் புண்ணிய மிகுதியால் தேவராயும் பாவ மிகுதியால் நரகராயும் பிறத்தலின், மக்கள் தேவர் நரகரெனக் சாதன சாத்திர முறையே வைத்தாரென்க. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியர், “உயர் திணை என் மனார் மக்கட் சுட்டே” என முன்னர்க் கூறிப் பின்னர் 'இவ்வென வறியு மந்தந் தமக்கில’ வாகிய 'தெய்வஞ் சுட்டிய பெயர்' முதலியனவும் “உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும்' எனக் கூறலின், உயர்திணைப் பாற் படுத்து, “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என முறை தெரிந்து ஓதினரெனக் கோடலுமாமென்க.

3