பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52

தமிழ் மக்களோடு பழக இன்றியமையாது துணை புரியும் தமிழ் மொழியை இராப்பகலாகப் பயின்றார். ஆறு மாதத்திற்குப் பிறகு எவர் உதவியுமின்றி எந்தத் தலைப்புப் பற்றியும் பல மணிக் கணக்காக உரையாட அவரால் முடிந்தது. அந்த அளவுக்கு மொழிப் பயிற்சி பெற்றர். .. தமிழ் மொழி முனிவரது மனத்தைக் கவர்ந்தது. ‘அழகு மிகுந்து வளப்பம் பொருந்தி மிகவும் பண்பட்டு விளங்குவது’ என்று மேலை நாட்டவருக்குத் தமிழை அறிமுகப்படுத்துகிறார். விரைவில் தாய் மொழியான இத்தாலிய மொழியும், படித்த போர்த்துக்கீசிய மொழியும் மறந்து போயின. அவற்றிற்குப் பதிலாகத் தமிழ்மொழி ஒன்றே அவர் கருத்துக்களை வெளியிடும் கருவி மொழியாக அமையலாயிற்று. இம்மொழியில் பேசுவதோடு அமையாது 1607ஆம் ஆண்டு தொடங்கி 1656ஆம் ஆண்டு சனவரி 16ஆம் நாள்–உயிர் துறக்கும் வரை அரிய பெரிய நூல்களைத் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தெலுங்கு மொழியிலும் இயற்றினர்.[1]

இந்த நிலை தத்துவ போதகர் மாட்டு மட்டுமின்றி, அந்த நூற்றாண்டிலும் அடுத்த ஓரிரு நூற்றாண்டுகளிலும் இந்தியாவுக்கு வந்த மேலை நாட்டு அறிஞர் மாட்டு உண்மையாக விளங்கிற்று. இந்த அடிப்படையில், நாம் மேலை நாட்டிலிருந்து, பல்வேறு வகையில் இத்தமிழ் நாட்டுக்கு வந்த மெக்கன்சி (Mackenzie), வில்சன் (H. M. Wilson) ஜான் முர்டாக் (John Murdock) முதலிய அறிஞர்தம் அரிய தொண்டினைக் காண முடிகின்றது. பத்தொன்பதாம் நூற்றண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் நிலவிய பல்வேறு இலக்கிய இலக்கண நூல்களையும், உரைநடை வளர்ச்சியினையும், பிறநாட்டு எழுத்துக்களையும் இவர்கள் வழியே நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.அப்படியே


  1. ஞானோபதேசம்-முன்னுரை III & IV.