பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56

தந்தனர் ‘கம்பெனியார்’. 1858 இல் விக்டோரியா மகா ராணியார் நேரடியாக நாட்டாட்சியை ஏற்றவரையில், கம்பெனியின் கீழ், கவர்னர்–ஜெனரல் ஆட்சியே தொடர்ந்து வந்தென அறிகிறோம்.

பத்தொன்பதாம் நூற்றண்டில் நாட்டு நீதி பற்றிய பல திருத்தங்கள் உண்டாயின. பலப்பல சட்டங்களும் நீதி மன்றங்களும் உண்டாக்கப் பெற்றன. அவை பற்றிய குறிப்புக்கள் பல தமிழில் — உரைநடையில் — பொது மக்கள் உணர்ந்து கொள்ள அவ்வப்போது வெளிவந்துள்ளன. 1802-06 இல் நாட்டு நீதி பற்றிய பொது அமைப்புச் சட்டமே உருவாயிற்று. 1700இல் சிவில் கிரிமினல் சட்டம் வந்தபோதிலும் அது செம்மையாக்கப் பெற்றது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயாம், சென்னை மாநிலம் 1,40,000 சதுரமைல் உடையதாய் 1808 இல் (பல மொழி மாநிலமாய்) அமைக்கப் பெற்றது, அரசாங்கக் கவர்னர், இருவர் அல்லது மூவர் கொண்ட குழுவோடு தம் ஆட்சியை நடத்தினர். ‘சூரி’ (Jury) முறை 1827 இல் நாட்டில் கொண்டுவரப் பெற்றது. 1816 இல் நடுவர், குற்ற விசாரணையாளர் (Judge & Magistrate) வேறுபடுத்தப் பெற்றனர். 1845 இல் மாவட்ட நீதி மன்றங்கள் உருவாயின. நில உரிமையும் செம்மைப் பகுப்புச் சட்டமும் (Land Settlement) 1820-27 இல் உருவாயின. 1833 இல் நாட்டு மக்கள் யாரும் எப்பதவியும் பெறலாம் எனச் சட்டத்தால் உரிமை வழங்கினர். ஆங்கிலேயப் பாராளுமன்ற நேரடி ஆட்சி 1858 இல் தொடங்கிற்று கிராம ஆட்சி அமைப்பு 1877 இல் உருவாயிற்று. இரெயில் வேக்கள் 1853 இல் தோன்றலாயின. இந்திய பீனல்கோடு சட்டம் 1861 இல் அமைக்கப் பெற்றது. இவ்வாறு நாட்டாட்சியிலும் ஆணை அறப் பிரிவுகளிலும் உண்டான பல்வேறு மாறுதல்களைத் தமிழ் உரைநடையிலே அவ்வப் போது வந்த அரசாங்க இதழ்களிலும், தனி அறிக்கைகளிலும் வெளியிட்டனர். அவற்றுள் ஒருசில பின்பு காணலாம்.