பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னாள் தமிழக முதல்வரின் முன்னுரை


அமிழ்தினும் இனிய தமிழ்மொழி இலக்கிய வளம் மிகுந்தது. நம் முன்னேர்களாகிய புலவர் பெருமக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சங்கம் வைத்து மொழியை வளர்த்தார்கள். காப்பியங்கள் இயற்றி மொழியின் இலக்கிய வளத்தைப் பெருக்கினர்கள். நவரசங்கள் ததும்பும் இக் காப்பியங்கள் மட்டுமன்றி, மக்களை நல்வழிப்படுத்துவதற்கென்றே நீதி நூல்கலையும், பக்தி மார்க்கத்துக்கு அடிப்படையான தோத்திரப் பாடல்களையும் பாடித் தந்தார்கள். இலக்கண நூல்களையும் உருவாக்கினர்கள். அவர்கள் மொழியின் வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு, ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட்டதால் தான் இன்று தமிழ்மொழி இவ்வளவு இலக்கிய, இலக்கண வளங்களோடு திகழ்கிறது.

ஒருமொழியின் வளர்ச்சி என்பது பல அம்சங்களோடு கூடிய பெரிய காரியம். ‘வாழ்க’ ‘வளர்க’ என்ற வெறும் வாழ்த்துக்களால் மட்டும் ஒரு மொழி ஒருபோதும் வளர்ச்சியடையாது. பழைய நூல்களைப் பாதுகாப்பது, வளர்ந்துவரும் மக்களினத்தின் சிந்தனைகளுக்கேற்பப் புதுமையான நூல்களை உருவாக்குவது, இலக்கண வரம்புகள் நசித்து விடாமல் கட்டிக் காப்பது, அந்த மொழியின் இலக்கிய, இலக்கண நயங்களைப்பற்றி ஆராய்ச்சி நூல்கள் எழுதுவது ஆகிய பல்வேறு வகைப்பட்ட பணிகளால்தான் மொழியை வளர்க்க முடியும்.

தழிழ் மொழியில், மொழி ஆராய்ச்சி நூல்களும், இலக்கிய வரலாற்று நூல்களும் போதுமான அளவு இல்லை என்பது அனைவர்க்கும் வெகுகாலமாக இருந்துவரும் ஒரு மனக்குறையாகும். ஆங்கிலமொழியில் இத்தகைய நூல்கள் அளவில்லாமல் இருக்கின்றன. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வோர் இராஜ வம்சத்தினரின் ஆதிக்கத்திலும் ஆங்கிலம்