பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சொற்பொழிவு ௨- (16-2-1965)

முன்னுரை

சென்ற நூற்றாண்டில் தமிழ்நாடு இருந்த நிலையினையும் அதன் சூழ்நிலையும் ஒருவாறு முதற் சொற்பொழிவில் கண்டோம். அந்தச் சூழல்களுக்கு இடையில் நாட்டு மொழியாகிய தமிழ் பல்வேறு வகைகளில் வளர்ச்சியடையத்தக்க வாய்ப்பினைப் பெற்ற நிலையினையும் ஓரளவு தெளிந்தோம். இன்று அதே நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ந்த வகைகளை ஆராய்தல் பொருத்தமுடைத்து என எண்ணுகிறேன்.

பொது மக்கள் இலக்கியம்

இலக்கிய அமைப்பில் வளர்வன மட்டுமின்றி, பொது மக்கள் வாழ்வை விளக்குவனவும் வாழ்வில் இடம் பெறுவனவும் உரைநடையின் பால் சார்த்தி எண்ணத்தக்கனவே என்று ஓரளவு கண்டோம். எனவே இறையனார் களவியலுரை போன்றும், சிவஞான பாடியும் போன்றும், பெருங்காப்பியங்களின் உரைநடை போன்றும் உள்ளன. ஒருபுறம் இலக்கிய உரை நடையென தோன்றி வீறுநடையிட்டு வளர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த அதே வேளையில், கல்லா மக்களிடத்தும் நன்கு எழுத படிக்கத் தெரியாத பாமர மக்களிடத்தும் தத்தம் கருத்து பரிமாற்றத்துக்காகவும் பொதுமக்கள் நலனுக்காகவும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை வளர்ப்பதற்காகவும், பல்வேறு நாட்டு நலன்களுக்காகவும் வாழ்ந்து வளர்ந்து வந்த உரைநடையையும் நாம் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இவை பேரிலக்கியங்களெனக் காலத்தை வென்று வாழத் தக்கன எனக் காண முடியாவிட்டாலும், இவைதாம் அவ்வக்காலங்களில் வாழ்ந்த மக்களின் உண்மையான வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரி