பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64

காலின் மெக்கன்சி (Lient. Col.Colin Mackenzie) அவர்கள் சிறந்தவர் என்பது மறக்க முடியாத உண்மை. அரசியல் துறைப் பணியாளராக ஆங்கில நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு 1782-இல் வந்த அவர், தம் பணியோடு பணியாகச் செல்லுமிடங்களிலெல்லாம் வாழ்ந்த கல்லா மக்களோடு கலந்து உறவாடி, அவர் தம் கொச்சை மொழியையும் வளமுற்ற இலக்கிய வளனையும் ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார். முப்பத்தெட்டு ஆண்டுகள் (1783—1821) பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றிப் பணியாற்றிய நாட்களில் அவர் தொகுத்துத் தந்தன பல. அவர் தம் அலுவல் நிலை உயர உயர-அவர் தம் ஆட்சிப் பொறுப்பின் எல்லை விரிய விரிய. அவர்தம் மொழியாய்வும் விரிந்துகொண்டே வந்தது. தமிழ் நாட்டில் மட்டுமின்றி இலங்கை, ஜாவா முதலிய இடங்களிலும் பணியாற்றிய அவர் இறுதியில் இந்தியப் பெரு நிலப்பரப்பிற்கே, ஒரு துறைக்கு-அளவை ஆய்வுத்துறைக்கு- (Surveyor General of India) தலைவரானார். எனவே அவர் செயலகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. எனினும், அவர்தம் தமிழ்மொழி ஆய்வு முற்றுப்பெறாது, அவரது 68 வது வயது வரை, அவர் இறுதி நாள் வரை (1821) வளர்ந்து கொண்டே தான் இருந்தது. அவர்தம் ஆய்வுக்கு உதவியவருள் ‘கர்னல் வில்க்ஸ்’ (Col.Wilks) என்ற அறிஞரும் ஒருவராவர். அவர்தம் ஆய்வுகள் பல ஆங்கில நாட்டிற்கு அனுப்பப் பெற்றன. அவற்றை வெளியிட அக்காலக் ‘கவர்னர் ஜெனரலான’ வாரன் ஹேஸ்ட்டிங் அவர்களால் உத்தரவும் தரப்பெற்றது. அவர்தம் அத்தகைய தமிழ், தெலுங்கு முதலிய ஏட்டுப் பிரதிகளைச் சேர்க்கப் பதினையாயிரம் பவுண்டு (E15,000/–) செலவாயிற்றெனவும் கணக்கிடப்பெற்றது. அவர்தம் மறைவுக்குப் பிறகு 1828-இல் போராசிரியர் வில்சன் (Prof. Wilson) அவர்கள் தாமே வலிய வந்து அத்தொகுப்பை வெளியிட்டார் அந்த வெளியீட்டில் பெரும்பான்மை தமிழிலேயே உள்ளன. ஒரு சில தெலுங்கும் கன்னடமும் இடம் பெற அமைகின்றன.