பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
81

உரைநடை ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளதை மறுக்க முடியுமோ?

இவ்வாறான கைபீதுகள் எண்ணற்றவை எனக் கண்டோம். மேலே நாம் கண்டது நேரில் சொல்லியது; ஊர் வரலாறு பற்றியது. இனி இந்த அடிப்படையில் மெக்கன்சி துரை அவர்கள் ‘ரயிட்டர் பாபு ராயர்’ அவருடன் சென்று அவ்வந் நிலத்து மக்களைக் கேள்வி கேட்டுப் பதில் பெறும் வழக்கமும் உண்டு எனக் காண்கிறோம். துரை அவர்கள் எழுத்தருடன் (writer) சென்று மக்களுடன் கலந்து பழகி, அவர்களை கேள்விகள் கேட்டுப் பெற்ற பதில்கள் பல. அவற்றுள் சீரங்க வினாவிடையைக் காண்போம்.

விவிைடை-பிரதியுத்தரம்

௧. வது கேள்வி: தர்மவர்மா எனப்பட்டவர் யார்? அவர்தானா தர்மராசர்? அவராலேதானா ஆதியில் ஸ்ரீரங்கம் கோயில் ஏற்பட்டது? ‘வர்மா’ என்பதற்கு அர்த்தம் என்ன?

உத்தரம்:—தர்மவர்மா வென்கிறவர் சோள தேசத்து ராஜா. அவர் தர்மராஜா அன்று. இந்தக் கலியுகத்துக்கு முன் துவாபரார்த்தத்தில் தர்ம ராஜாவினுடைய காலம். தர்ம வர்மாவினுடைய காலம் ௩௰௬ சதுர்யுகத்துக்கு முன் திரேதாயுகத்து ராஜா, விபீஷணருக்குக் கொடுத்த ஸ்ரீரங்க திவ்ய விமானத்துக்குத் தர்மவர்மா சப்தப்காரம், மண்டபம், கோபுராதிகள் கட்டினவர். ‘வர்மா’ என்ற சப்தத்துக்குக் கவசம் என்று அர்த்தம். ஆகச்(சே) செய்த தர்மத்தைக் கவசமாக உடையவர், (வர்ம சப்தம் க்ஷத்திரியரைக் குறிக்கும் ஒரு குறிப்புப் பேராம். அது சர்மா என்பது பிராமணரைக் குறிப்பது போலா மென்க.) தர்ம வர்மாவினுடைய வாசஸ்தானம் உறையூர். அதற்கு நிகளாபுரி என்றும் பெயர். அவர் துரைத்தனம் முதல்தான் அந்தப் பட்டணத்துக்குப் பிரசித்தி. (Mec. Collections D. 3186)