பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88

கண்டு குருதியாற் பூசுற்ற முகத்துடனே தனது ஆற்றலைக் காட்ட விரும்பி விரைந்து துவார முகமாக வருகையில், வந்த பார்ப்பினி செந்நீரால் நிறைந்த அதன் வதனத்தைப் பார்த்த வளவில் அது தன் பிள்ளையைக் கடித்து மடித்ததென்று உள்ளித் துள்ளித் துணுக்குற்று நீர்க்குடஞ் சிதைவுறும்படி அதன் தலைமேற் போட்டுக் கொன்று உடனே உட்புகா நிற்கையில், மகன் உறங்குதலையும் அருகே கரும்பாம்பின் துணிக்கைக் குவையையுங் கண்டு அந்தோ! கெட்டேன், யான் என் அருங்குழவியை நன்காராய்தலின்றிக் கொலை செய்தேனெனச் சோனமுற்றுப் புலம்பா நிற்புழி அவள் தலைவன் ஆண்டு எய்தி, ‘குழந்தை இதோ இருக்கையில் நீ வெறுமையென மகவிழந்தே னென்றேன் கதறிக் கலுழ்கின்றன? என்னடி பேதாய்!” என மனைவி, “நீர் யாதோ பேரவாவால் என் மொழி தள்ளிப் போனமையால் அதன் பயன் இந்தோ வாய்த்தது, இது மிக்க அவாவினன் மூடி மேற் சக்கிரம் சுழன்றதை யொத்தது” என, அவன் ‘அஃதெவ்வண்ணம்? உரைத்தி’ என உரைப்பான்.

–பக். 131, 132.

கதைகள்

இப்படியே வேறு சில கதைகளும் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று மரியாதைராமன் கதை. 1847–இல் சைதாப்பேட்டை தேசப்ப செட்டியார் குமாரர் வீரபத்திர செட்டியாரால் ஜீவரக்ஷாமிர்த அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்ற கதா சிந்தாமணி என்ற நூலில் ஒரு பகுதி இது. இந் நூல் பல சிறு கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இதில் நடை அவ்வளவு சிறந்ததாக இல்லை யெனினும் இத்தகைய கதைகளைப் பொது மக்கள் விரும்பிப் படித்தார்கள் எனக்காண முடிகின்றது. எனவே அதையும் இங்கே தருகின்றேன்.