பக்கம்:பனித்துளி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. தை பிறந்தது

உதய சூரியனின் பொன் கிரணங்கள் பொன்மணிக் கிராமத்தின் வயல் வரப்புகள் மீது தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதி காலையில் புகை மாதிரி எங்கும் படர்ந்திருந்த பனித் திரையை விலக்கிக்கொண்டு சூர்யோதயம் ஆயிற்று. மார்கழி மாசமாதலால் பஜனை கோஷ்டி ஒன்று பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி, கிராமத்தின் வீதிகளில் பாடிக்கொண்டு போயிற்று. சூர்ய உதயத்துக்குள் கிராம வாசிகளில் பெரும்பாலோருக்கு ஸ்நானபானாதிகள் முடிந்துவிடும் என்பதற்கு அத்தாட்சியாக பெண்கள் குளத்தில் குளித்துவிட்டு, இடுப்பில் குடத்துடன் ஆலயத்தைப் பிரதட்சிணம் செய்து கொண்டு தத்தம் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். வயல்களில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. இன்னும் பதினைந்து தினங்களில் பொங்கல் திருநாள் வருகிறது. உற்றார் உறவினருடன் உழைப்பின் பலனை அனுபவிக்க விவசாயிகள் அந்தத் திருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் பெற்ற சேயை அன்புடன் தழுவிக் கொள்வதுபோல் அந்தக் காலை நேரத்தில் வயலில் பழுத்துச் சாய்ந்திருக்கும் நெற்கதிர்களை விவசாயிகள் ஆசையுடனும் பெருமையுடனும் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பஜனை கோஷ்டியில் முக்கியமாகச் சிரத்தையுடன் பங்கெடுத்துக் கொண்டவர்களில் உபாத்தியாயர் ராமபத்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/7&oldid=1156049" இலிருந்து மீள்விக்கப்பட்டது