பக்கம்:பனித்துளி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பனித்துளி

7

 தமக்கு முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார், சுப்பாமணி என்கிற சுப்பிரமணிய அய்யர்.

ராமபத்திரய்யர் யோசனையில் மூழ்கியவாறு வீட்டை அடைந்தார்.

அவர் வீட்டை அடையும்போது அவர் பெண் காமாட்சி கூடத்தில் இருக்கும் படங்களுக்குப் புஷ்பமாலை போட்டு, குத்துவிளக்கேற்றி நமஸ்கரித்துக் கொண்டிருந்தாள். அவள் மனத்திலும் அன்று காலையிலிருந்து ஏக்கமும் கவலையும் நிரம்பி இருந்தன.

ராமபத்திரய்யர் பெண்ணைச் சிறிது நேரம் கவனித்து விட்டுப் பெருமூச்சுடன் அங்கு இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டார். “இன்னும் பதினைந்து தினங்களில் தை பிறக்கப் போகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். ஆனால் கடந்த ஐந்து வருஷங்களாகத் தை மாதம் பிறந்து, கல்யாண மாசங்களெல்லாம் வெறும் மாதங்களாக மறைந்து விடுகின்றன. நம்பிக்கைக்கு இடம் இல்லாமல் அல்லவா தை மாதம் பிறக்கிறது?” என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர்.

“அப்பா! பென்ஷன்” வாங்க ராஜம்பேட்டைக்குப் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? சாப்பிட்டு விட்டுத்தானே போகப் போகிறீர்கள்? வெயில் பொசுக்கி விடுமே!” என்று கேட்டாள் காமு.

“வெயிலைப் பார்த்தால் முடியுமா, அம்மா? முக்கியமான வேலை என்றால் போய்த் தானே ஆக வேண்டும்?” என்று கூறினார் அவர்.

சாப்பாட்டுக்கு அப்புறம் ஏதோ ஒரு தீர்மானத்துடன் காமுவின் ஜாதகத்தையும் கையுடன் எடுத்துக்கொண்டு பென்ஷன் வாங்க ராஜம்பேட்டைக்குக் கிளம்பினார், ராமபத்திரய்யர். புறப்படும்போது, “உன் அம்மா எங்கே, காணோம்? வழக்கம்போல் அப்பளக் கச்சேரிக்குக் கிளம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/9&oldid=1156053" இலிருந்து மீள்விக்கப்பட்டது