பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

பன்னிரு திருமுறை வரலாறு


ஒடுங் கவந்தியுமே உறவென்றிட் டுன் கசிந்து தேடும் பொருளுஞ் சிவன் கழலே யெனத் தெளிந்து கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடுங் குலாத் தில்லையாண்டானைக் கொண்டன்றே

என்பது இப்பதிகத்தின் முதல் திருப்பாட்டாகும். "திருவோ டாகிய உண்கலனும் கந்தையாகிய கோவனமுமே என் தொடர்புடைய உறவெனக்கொண்டு துறவுநிலையில் நின்று உள்ளம் கசிந்துருகி உணர்வுடைய உயிரால் தேடியடையத் தக்க பெரும் பொருளாவன சிவபெருமானுடைய திருவடி களே என்னுந் தெளிவுபெற்று உடம்பும் அதன்கண் நிலை பெற்ற உயிரும் உவகைக் கூத்தாட, அடியேன் ஆடும் கூத்தாகிய மகிழ்ச்சிப்பெருக்கானது, தில்லைத் திருமன்றிற் கூத்தியற்றி எளியேனே ஆட்கொண்டருளிய இறைவனைக் கொண்டு விளைந்ததாகும் ” என்பது இதன் பொருளாகும். ஒடு - பிச்சை எடுத்தற்குரிய திருவோடு. கவந்தி - கந்தை; கோவணம், கூடு - உடம்பு. குமண்டை - கூத்து. திருவாத வூரடிகள் ஓடாகிய உண்கலனும் கோவண ஆடையும் கொண்டு துறவுநிலையில் ஒழுகியவர் என்பது இத்திருப் பாடலால் இனிது புலனுதல் காணலாம்.

சக. அற்புதப் பத்து

அற்புதம் - ஆச்சரியம். நிகழாதது ஒன்று உலகத்து நிகழ்ந்தால் தோன்றும் மருட்கைச் சுவையினை அற்புதம் என வழங்குவர். அதிசயம் என்பது ஒன்றின் மிகுதியைக் குறிப் பது. இறைவனது திருவருட் பெருமையின் மிகுதியினை அதிசயப்பத்தில் விரித்துப் போற்றிய அடிகள், தன் அருளைப்பெறுதற்குச் சிறிதும் தகுதியில்லாத என் பொருட்டு எல்லாம் வல்ல இறைவனே திருப்பெருந்துறையில் மானிட உருத்தாங்கி வெளிப்பட்டு அருள் புரிந்தான் எனத் தம்மை அடிமைகொண்டருளிய அற்புத நிகழ்ச்சியினை வெளியிட்டு உரைக்கும் பனுவலாதலின், இஃது அற்புதப்பத்து என்னும் பெயர் உடையதாயிற்று.

அடிகள், இத்திருப்பதிகத்திற்பாடல்தோறும் தம்முடைய சிறுமையினையும், பெருமறை தேடிய அரும்பொருளாகிய இறைவன் தம்பொருட்டுக் குருமேனி கொண்டு வெளிப் பட்டுத் தோன்றிச் சிவஞானத்தை உபதேசித்தருளிய அற்புத நிகழ்ச்சியையும் ஒருங்கு குறித்துள்ளமை காணலாம்.