பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 பன்னிரு திருமுறை வரலாறு

சேக்கிழார் இயற்றிய இத் திருத்தொண்டர் புராணம், உள்ளோன் தலைவகை உள்ளது புணர்த்தல் என்னும் முறையிலமைந்த வரலாற்றுக் காப்பியமாகும். இந்நூலிற் போற்றப்பெறும் திருத்தொண்டர் யாவரும் இந்நாட்டிற் பிறந்து வாழ்ந்தவர்களே. அவர்களைக் குறித்து இந் நூலிற் கூறப்பெறும் உலகியற் செய்திகள் யாவும் உண்மை யாக நிகழ்ந்த செய்திகளே என்பது, அச்செய்திகளிற் பல தமிழக வரலாற்றிற் கல்வெட்டுச் சான்றுகளோடும் தமி ழிலக்கியச் சான்றுகளோடும் தொடர்புடையனவாய் நெடுங்காலமாக வழங்கிவரும் முறைமை கொண்டு நன்கு துணியப்படும்.

மக்கள் வாழ்க்கையின் உளவியல் நுட்பங்களையும் அறிவின் திறங்களையும் செயலாற்றல்களையும் நுணுகி ஆராய்ந்து அவற்றை இனிது விளக்கும் முறையில் வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லோவியஞ் செய்து காட்ட வல்ல பேராசிரியர்களே பெரும்புலவர் எனப் போற்றத் தகும் சிறப்புடையராவர். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த மெய்யடியார்களின் உலகியல் வாழ்வினை உள்ளவாறு விளக்குமுகமாக, உலக மக்களால் தெய்வத்துள் வைத்துப் போற்றப்பெற்ற அப்பெருமக்களது அருள் வாழ்வினை அறி வுறுத்துவது, சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணமாகும். இந்நூல்,

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும் ?

என்னும் திருவள்ளுவர் வாய்மொழிப் பொருளை விளக்கும் வாழ்க்கை நூலாகத் திகழ்கின்றது.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் எனக் கூறிய திருவள்ளுவர், ஒத்த பிறப்பினராகிய மக்களுள், மனத்தைத் தீயநெறியினின்றும் விலக்கி நன்றின்பாற் செலுத்துத லாகிய அரிய செயல்களைச் செய்வோரே பெரியர் எனவும், அவ்வாறு மனத்தை ஒரு நெறிப்படுத்தும் அறிவு வன்மை வின்றி மனம் போனபடி எளிய செயல்களையே செய்வோர் சிறியர் எனவும் செய்தொழில் வேற்றுமையால் உலக மக்களை இருவகையினராகப் பகுத்துள்ளார்.